• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா

BySeenu

Sep 26, 2024

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது.

துவக்க நிகழ்ச்சியில் மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் ஆகியன சார்பில் நடத்தப்படும் இந்த விழாவில் 250க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, புதிய பயிர் ரகங்கள், மேலாண்மை தொழில்நுட்பங்கள், பயிர் ஊக்கிகள், பூச்சி நோய் எதிர்ப்பு காரணிகள், அங்கக வேளாண் இடுபொருட்கள், நானோ தொழில்நுட்பங்கள், மதிப்பு கூட்டல் தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் வேளாண்மை மற்றும் தானியங்கி நீர் பாசன கருவிகள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், வேளாண் தொழில்நுட்ப கருத்தரங்குகள், நேரடி பண்ணை செயல் விளக்கங்கள், பண்ணை கருவிகளின் மாதிரி திடல்கள், விவசாய கடன் மற்றும் பயிர் காப்பீடு குறித்த வங்கி அதிகாரிகளின் விளக்கக் கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு கேட்டறிந்தனர். இந்நிகழ்வில், மாநில உழவர் நலத்துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, ஹைதராபாத் வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி கழகத்தின் இயக்குனர் முனைவர் ஷேக் நா.மீரா, சென்னை நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் ஆனந்த், புதுடெல்லி இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் ராம் மோகன் ரெட்டி, வேளாண்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி ஆகியோர் கருத்துரைகள் வழங்கினர். இந்நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு விவசாயிகளுக்கு வேளாண் செம்மல் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறுகையில், விவசாயத்திற்கான வேலையாட்கள் குறைந்து கொண்டு வருகிற சூழலில், மூன்றாண்டுகளில் வேளாண் பொறியியல் துறை சார்பில், விவசாயிகளுக்கு மானிய விலையில் பல்வேறு விவசாய கருவிகள் வழங்கப்படுகிறது என்றார். கண்காட்சியில் விவசாயம் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம் என்றும் கூறினார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில், அதிக விளைச்சல் தரக்கூடிய புதிய பயிர் வகைகளும் நவீன தொழில்நுட்பங்களும் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தன்று வெளியிடப்படுவதாகவும் மண்ணுக்கேற்ற புதிய ரகங்கள் குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இந்த ஆராய்ச்சிகளுக்கு தமிழக அரசு சார்பில் தொடர்ந்து நிதி அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், ஏராளமான விவசாயிகள், வேளாண் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நடைபெறும் மாநில அளவிலான உழவர் தின விழா, 29ஆம் தேதி வரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.