• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை ராணுவத்தினர் இந்தியா வரத் தடை விதிக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை

போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை ராணுவத்தினர் இந்தியா வரத் தடை விதிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணிராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

2009-ல் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் எனக் கூறி இலங்கை அரசு நடத்திய போரில் இலங்கையில் விடுதலைப் புலிகள் நடத்திவந்த ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. அதனுடன் அப்பாவி மக்கள் லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களைப் படுகொலை செய்த சிங்கள ராணுவ அதிகாரிகளை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகள்:

”இலங்கையில் அப்பாவி ஈழத்தமிழர்கள் 19 பேரைப் படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, அதிபர் கோத்தபயவால் மன்னிக்கப்பட்ட சிங்கள ராணுவ அதிகாரிகள் ஹெட்டியாராச்சி, சுனில் ரத்னாயகே ஆகியோர் அமெரிக்காவில் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது!

மனித உரிமைகளை மதிக்காதவர்கள், போர்க்குற்றங்களைச் செய்தவர்கள் உலக நாடுகளால் புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதுதான் பொது விதி. ஒரு நாடு மனித உரிமையை மதிக்கிறது; பாதிக்கப்பட்ட சமூகத்தின் பக்கம் நிற்கிறது என்பதற்கு அதுதான் அடையாளம். அதை அமெரிக்கா சரியாகச் செய்திருக்கிறது!

ஆனால், இலங்கையில் ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள ராணுவ அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இந்தியாவுக்கு விருந்தினர்களாக வந்து செல்கின்றனர். இது தடுக்கப்பட வேண்டும். இலங்கையில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் இந்தியாவில் நுழையத் தடை விதிக்கப்பட வேண்டும்”. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.