
வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிமுக எழுச்சி மாநாட்டிற்கு, சென்னையில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாடு நடப்பதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கின்ற நிலையில் இப்போதே அங்கு தங்குவதற்கு அறைகள், உணவு, பயணம் செய்ய வாகனங்கள் போன்றவற்றை முன்பதிவு செய்து வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் தொண்டர்களை மாநாட்டில் பங்கு பெற செய்து தன் பக்கம் தான் அ.தி.மு.க.வினர் இருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்ட எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். அந்த வகையில் மதுரை மாநாட்டில் திரளாக பங்கேற்க சென்னை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் பல்வேறு கட்டமாக கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர். 9 மாவட்டங்களில் இருந்து மொத்தம் 15 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வகையில் பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களை முன்பதிவு செய்து வருகின்றனர். 200 டிவிசனுக்கு உட்பட்ட 300 வட்டங்களில் இருந்து 500 வேன்கள் மற்றும் கார்கள் என மொத்தம் 1000 வாகனங்களில் பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.
சென்னை மாவட்ட செயலாளர்கள் டி.ஜெயக்குமார், பாலகங்கா, ஆதிராஜாராம், வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், வி.என்.ரவி, தி.நகர் சத்யா, அசோக், கே.பி.கந்தன் ஆகியோர் தொண்டர்களை அழைத்து செல்ல சிறப்பு ரெயில் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட செயலாளர்கள் கூறும் போது, சென்னையில் இருந்து செல்லும் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு மண்டபம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு பந்தலில் 6 இடங்களில் 3 வேளையும் உணவு இடைவெளி இல்லாமல் வழங்கப்பட உள்ளது. வட்டத்திற்கு 3 வேன் வீதம் தொண்டர்களை அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர சிறப்ப ரெயில்களும் ஏற்பாடு செய்யப்படுகிறது. 3-ம் வகுப்பு ஏ.சி. படுக்கை வசதி ரெயில் ஒன்று பிரத்யேகமாக பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 21 ஏ.சி. பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில் 1500 பேர் பயணம் செய்யலாம்.
