• Fri. Apr 26th, 2024

லெபனானில் விமானத்தை துளைத்து
கொண்டு புகுந்த துப்பாக்கி குண்டு

லெபனான் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும் போது, எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு ஒன்று விமானத்தை தாக்கியது.
ஜோர்டானில் இருந்து லெபனான் தலைநகர் பெய்ரூட் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும் போது, எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு ஒன்று விமானத்தை தாக்கியது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை அன்று நடந்தது. லெபனானில் ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் வைத்திருப்பது மிகவும் சாதாரண விஷயமாக உள்ளது. அங்கு அரசியல்வாதிகளின் பேச்சுக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ தேர்வு முடிவுகள் வெளியீடு போன்ற பொது நிகழ்ச்சிகள் நடைபெறும்போது பல சந்தர்ப்பங்களில், பட்டாசுகள் வெடிப்பது போல அங்கு துப்பாக்கிகள் சுடப்படுகின்றன. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தை சேர்ந்த முகமட் எல்-ஹவுட் கூறியதாவது, பெய்ரூட் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் இருந்து துப்பாக்கிகள் சுடப்படுவதால், அதிலிருந்து வெளிவரும் குண்டுகள் வழி தவறி, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக எட்டு விமானங்கள் தாக்கப்படுகின்றன. லெபனானில் வான்வெளியில் துப்பாக்கியால் சுடும் இந்த நடைமுறைகள் நிறுத்தப்பட வேண்டும். இது விமான போக்குவரத்துக்கும் விமான நிலையத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். இந்த விபத்து நடந்த போது, லெபனான் மந்திரி பாலா யாக்கோபியன் அந்த விமானத்தில் இருந்தார். அவர் விமானம் சேதமடைந்த படங்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, லெபனானில் கட்டுப்பாடற்ற ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கியால் சுடும் இத்தகைய நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *