தோவாளையில் கோடி லிங்க தரிசனம், ஈஸ்வரனின் ஆன்மீக மருத்துவ பட கண்காட்சி மற்றும் போதை பழக்க ஒழிப்பு பட கண்காட்சி திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நாகர்கோவில் பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் தோவாளையில் கோடி லிங்க தரிசனம், ஈஸ்வரனின் ஆன்மீக மருத்துவ பட கண்காட்சி மற்றும் போதை பழக்க ஒழிப்பு பட கண்காட்சி திறப்பு விழா தோவாளை கிருஷ்ணன்புதூர் தேவி திருமண மண்டபத்தில் 24-05-2025 முதல் 26-05-2026 வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. தொடக்க விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பண்புகள் நிறைந்த சமுதாயத்திற்காக என்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கோடி லிங்க தரிசன நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்து கொடியேற்றி வைத்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், ஆன்மீகத்தின் வழியாகவே அமைதியை பெற முடியும். பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் ஆன்மீக பணிகளை சிறந்த முறையில் மேற்கொண்டு வருகிறது. அவர்களின் முயற்சிகளையும், சமுதாயப் பணிகளையும் பாராட்டுகிறேன். மனதார வாழ்த்துக்கிறேன். மன அழுத்தத்திலிருந்து விடுபட இறைவாழிபாடு செய்வது தலையாய கடமையாகும்.
நமது உள்ளத்தை நல் வழியில் கொண்டு செல்லும் போது நன்மைகள் இறையருளோடு நமக்கு நன்கு நடக்கும். நல்ல பழக்க வழக்கங்களை கொண்டு நாம் செயல்பட வேண்டும். பிறருக்கு உதவி செய்கின்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வெண்டும். இரக்க தன்மையோடு, மனிதாபிமான உணர்வோடு பிறருக்கு நாம் உதவி புரிய வேண்டும். பிறருக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வதில் பின் வாங்க கூடாது என அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு சேவை ஒருங்கிணைப்பாளர் ராஜயோகினி கோகிலா தலைமை வகித்தார். திருநெல்வேலி மாவட்ட பிரம்மா குமாரிகள் இயக்க பொறுப்பாளர் ராஜயோகினி புவனேஸ்வரி, தென்காசி சேவை ஒருங்கிணைப்பாளர் ராஜயோகி கெடன் சிவபாலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னாள் தோவாளை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சாந்தினிபகவதியப்பன், ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் டாக்டர் தெய்வப் பிரகாஷ், கிருஷ்ணன்புதூர் ஊர்த்தலைவர் கேசவமுருகன் ஆகியோர் பங்கேற்றனர். இவ்விழாவில் பக்தர்களும், ஊர் பொதுமக்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.