

தென்காசி அருகே குருவிகுளத்தில் கோவில் மற்றும் குடியிருப்புகள் அருகே வளர்த்து வரும் மாடுகளின் கழிவுகளால் சுகாதார சீர்கேடு. 7 தினங்களுக்குள் அகற்ற உத்தரவிட்டு 2 மாதமாகியும் பலனில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் தெற்கு வாசல் தெருவில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே தனிநபர் ஒருவர் சுமார் 20 க்கும் மேற்பட்ட மாடுகளை தனது வீட்டின் அருகே ஷெட் அமைத்து கடந்த சில ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். தற்போது இந்த மாட்டின் கழிவுகள் சாலைகளில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தேங்கி கிடக்கும் கழிவு நீரில் கொசுக்கள் மற்றும் ஈக்கள் உற்பத்தியாகி இப் பகுதியில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் கூறியதாவது –
குருவிகுளம் தெற்கு வாசல் தெருவில் தனிநபர் வளர்த்து வரும் மாடு களால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும் இதனருகில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் அருகே பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. தற்போது மாடுகளின் கழிவுகளால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்தவாறு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மாடுகளை அகற்றி வாறுகாலை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர், சங்கரன்கோவில் கோட்டாட்சியர், திருவேங்கடம் வட்டாட்சியர், குருவிகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர், குருவிகுளம் பஞ்சாயத்து தலைவர், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அனுப்பினேன்.
தற்போது இந்த ஆக்கிரமிப்புகளை 7 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அரசு உத்தரவிட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது இரண்டு மாத காலமாகியும் அந்த இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட வில்லை. இதனால் இப்பகுதியில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பகளை துரிதமாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
