சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை மைலாப்பூர் பெருநகர காவல் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டிருந்த மணற்சிற்பத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்து வைத்தார்.
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மேடை எனும் பெயரில் காவல்துறை அதிகாரிகளும், திரையுலக பிரபலங்களும், கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் போதை பொருளுக்கு எதிரான எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம் எனும் விழிப்புணர்வு வாசகத்தை கல்லூரி மாணவிகள் ஒன்றிணைந்து முழங்கினர்.
மேலும் போதை பொருளுக்கு எதிராக பொதுமக்களிடத்தில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மணற் சிற்பம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருந்தது.
இதனை சென்னை மாநகராட்சியின் உணவு மற்றும் நுகர்வோர் துறை செயலாளர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளரான ராதாகிருஷ்ணன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வின் போது சென்னை வடக்கு மண்டல காவல்துறையின் கூடுதல் ஆணையர் த லோகநாதன் சென்னை வடக்கு மண்டல காவல்துறையின் இணை ஆணையர் ஆர். வி. ரம்யா பாரதி, சென்னை வடக்கு மண்டல காவல்துறையின் இணை ஆணையர் திருமதி. திஷா மிட்டல், சென்னை கிழக்கு மண்டல காவல்துறையின் இணை ஆணையர் திரு ரஜத் சதுர்வேதி, மயிலாப்பூர் காவல் மாவட்டத்தின் இணை ஆணையர் சகாதேவன், மயிலாப்பூர் காவல்துறை உதவி ஆணையர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் உடனிருந்தனர்.
இவர்களுடன் கல்லூரி மாணவிகள் போதை பொருளுக்கு எதிராக பாடல்கள் மைம் எனப்படும் கலை வடிவம் சிறு நாடகம் போன்றவற்றின் மூலமாக விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது:
இங்கு கூடியிருக்கும் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் அனைவரும் தங்களது வாழ்க்கையை ஆரோக்கியமான முறையில் சந்தோஷமாக செலவழித்து வருகிறீர்கள் என நம்புகிறேன்.
ஆனால் இந்த சமூகத்தில் போதை பொருளுக்கு அடிமையானவர்கள் அதிகரித்து வருகிறார்கள். உங்களுடைய நண்பர்களோ அல்லது தோழிகளோ யாரேனும் போதை பொருளுக்கு அடிமையாக இருந்தால் அவர்களைப் பற்றிய தகவல்களை தெரிவித்து அவர்களை இதிலிருந்து மீட்கும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுங்கள்.
அவர்களை போதை பொருளுக்கு அடிமையாகாமல் தடுக்க வேண்டிய பொறுப்பும் உங்களிடம் இருக்கிறது.
மேலும் போதை பொருளை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்ப்போம். இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் விழிப்புணர்வு வாசகத்தை அனைவரும் ஒன்றிணைந்து கூறுவோம் எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம் போதை பொருளை பயன்படுத்தாமல் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வில் முழுமையாக ஈடுபட்டு சமூக நலனை காப்போம் என்றார்.