• Fri. Nov 14th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

விஜயராகவனை நலம் விசாரித்த எஸ்.பி வேலுமணி..,

BySeenu

Sep 22, 2025

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தேவராயபுரம் பகுதியில் ரோலக்ஸ் என்ற காட்டு யானையை பிடிப்பதற்கு கடந்த ஒரு வார காலமாக வனத்துறையினர் போராடி வருகின்றனர். அந்நிலையில் சனிக்கிழமையன்று அந்த காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முற்பட்ட பொழுது ஆனைமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் யானை தாக்கியதில் படுகாயம் அடைந்தார். தற்பொழுது அவர் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இன்று தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தொண்டாமுத்தூர் பகுதியில் யானை தொந்தரவு அதிகமாக உள்ளது. ரோலக்ஸ் யானை தொடர்ந்து ஊருக்குள் வருகிறது மருதாச்சலம் என்பவரை தாக்கி அவரும் இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவித்தார்.

இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன். கும்கி யானைகளை வைத்து நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கால்நடை மருத்துவர் விஜயராகவன் யானையால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார், மக்களை பாதுகாக்க கூடிய அதிகாரிகள் இது போன்ற சூழ்நிலையில் மாட்டக்கூடாது. மருத்துவர் பரிபூரணமாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றார்.

இதற்கான நிரந்தர தீர்விற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,
கோவையில் யானை மனித மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, தாளியூர் நரசிபுரம் அட்டுக்கல் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியான பிரச்சனை உள்ளது, இதற்கு நிரந்தர தீர்வு என்னவென்றால் கர்நாடக மாநிலத்தில் அமைத்துள்ளதை போல தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் ரயில் தண்டவாளங்களில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

அதிமுக ஆட்சியில் அதிகமான பேர் வனத்துறையில் நியமிக்கப்பட்டனர் ஆனால் தற்பொழுது குறைவாக உள்ளனர். தற்போது தொண்டாமுத்தூர் பகுதிக்கு டாப்சிலிப் பகுதியில் இருந்து வந்த வன குழுவினர் இங்கேயே நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

வனத்துறையினருக்கு தேவையான உபகரணங்களை அரசு வழங்க வேண்டும் என்றும். அதிமுக ஆட்சியில் முன்வைத்த திட்டங்கள் இன்னும் செயல்படுத்தாமல் உள்ளது. யானை மனித மோதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் கூடிய விரைவில் நடைபெறும் ஆனால் எந்த போராட்டம் நடத்தினாலும் அரசு செவி சாய்ப்பதில்லை என குற்றம் சாட்டினார்.

ஆக்கிரமிப்புகள் உள்ளது குறித்தான கேள்விக்கு, அரசு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறினார். அதிமுக ஆட்சியில் யானைகள் வருவதை தடுக்க அகழிகள் அமைத்தோம்
இருப்பினும் யானைகள் அதனைத் தாண்டி வருகிறது அது brilliant ஆக உள்ளது என்றார்.

கோவையில் பாலங்கள் சாலை பணிகள் ஆகியவற்றை வேகமாக முடிக்க வேண்டும், யானைகள் தாக்கி உயிர்கள் இறப்பு ஏற்பட்டாலும் அரசு மெத்தனப்போக்குடன் இருக்கிறது என்றார்.

செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போகிறார் என்ற தகவல் வருகிறது என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் புறப்பட்டு சென்றார்.