தமிழ்நாடு சட்டமன்ற பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமனம். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே பெரும் மோதல் ஏற்பட்டு பிளவுபட்டது. இதனையடுதத்து, சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்ததால் நீக்கப்பட்டனர். பின்னர், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இதைதொடர்ந்து ஓபிஎஸ்-ன் பதவி பறிபோனது. கட்சியில் இருந்தபோது எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் பதவி வகித்திருந்தார்.ஆனால் அவர் தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் அந்த பதவியும் பறிபோய், அந்த இடத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், சென்னை, ஆழ்வார்பேட்டையில் (17.07.2022 ) ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு, கழக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், கழகத்தின் சார்பில், சட்டமன்றக் கட்சித் துணைத் தலைவர் மற்றும் துணைச் செயலாளரை தேர்வு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த தேர்வு அனைத்து உறுப்பினர்களால் ஓத்து எடுக்கப்பட்ட முடிவு எனவும் அதில் தெரிவித்துள்ளார். கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமார், துணைச் செயலாளராக அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தியும் தேர்வாகியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.