கோவை காரி மோட்டார் ஸ்பீட்வேயில் ஜேகே டயர் ரேசிங் சீசன் 2025-ன் 2வது சுற்று ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஜேகே டயர் லெவிடாஸ் கோப்பை, ராயல் என்பீல்ட் கான்டினென்டல் ஜிடி கோப்பை மற்றும் ஜேகே டயர் நோவிஸ் கோப்பை என பல்வேறு பிரிவு போட்டிகளில் வீரர்கள் தங்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள்.

இந்த ஆண்டு ஜேகே டயரின் பந்தய நாட்காட்டியில் அறிமுகப்படுத்தப்பட்ட லெவிடாஸ் கோப்பையின் இறுதிப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்ததன் மூலம், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜெய் பிரசாந்த் வெங்கட், மாருதி இக்னிஸ் மாடல் காரை தன்னால் தன்னம்பிக்கையுடன் கையாள முடியும் என்பதை வெளிப்படுத்தினார். போட்டியில், ஜெய் பிரசாந்த் 10 சுற்றுகளாக நடந்த 2.3 கிமீ தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார்.