• Wed. Nov 18th, 2026

அரசு மற்றும் தனியார் பள்ளி அருகில் அறுந்து விழும் மின் வயர்களால் விபத்து ஏற்படும் அபாயம்..,

ByKalamegam Viswanathan

Nov 18, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் அறுந்து விழும் நிலையில் பல இடங்களில் மின் வயர்கள் ஆபத்தான நிலையில் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக பள்ளிகள் வழிபாட்டுத்தலங்கள் பேருந்து நிலையங்கள் ஆகிய பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்லும் மின் வயர்கள் பழுதடைந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் அருந்து விழும் நிலையில் ஆபத்தில் உள்ளது.

இதனால் எந்நேரமும் பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 9 மணி அளவில் சோழவந்தான் பேட்டை பகுதியில் உள்ள மின்கம்பத்தில் இருந்த பழுதடைந்த மின் வயர்கள் திடீரென அறுந்து சாலையில் விழுந்தது அருகிலேயே அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி உள்ள நிலையில் காலை 9 மணி என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர் சாலையில் ஆங்காங்கே குழந்தைகள் சென்று கொண்டிருந்த நேரத்தில் திடீரென அருந்து விழுந்த மின் வயரில் இருந்து மின்சாரம் பொறி பொறியாக தீ சுவாலையுடன் எறிய தொடங்கியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் சுதாரித்து குழந்தைகளை வேறு பகுதிக்கு அனுப்பி வைத்து மின்சார துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்சார துறை அலுவலர்கள் மின் இணைப்பைத் துண்டித்து உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். சுமார் 50 அடிக்கு உள்ளாக இரண்டு மின்கம்பங்கள் இருந்த நிலையில் மூன்று இடங்களில் மின் வயர்கள் ஓட்டு போட்டு இருந்தது கண்டு பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏற்கனவே மின்சார வயர்கள் பழுதடைந்த நிலையில் அறுந்து விழுந்த நிலையில் தற்போது மீண்டும் அதே இடத்தில் அறுந்து விழுந்தது பொதுமக்களை கடும் ஆத்திரம் அடைய செய்தது.

பல ஆண்டுகளாக பழைய மின்வயர்களை பயன்படுத்தி வருவதே இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் என பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் நான்காவது முறையாக அதே மின் வயரை ஒட்டி சரி செய்து மின்சார துறை அதிகாரிகள் சென்ற நிலையில் முழுவதுமாக பழைய மின்வயர்களை மாற்றி புதிய மின்வயர்களை அமைக்க வேண்டும் என பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி என இரண்டு பள்ளிகள் அருகில் உள்ள நிலையில் மின்வயர்கள் மூலம் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறும் பொதுமக்கள் பெரிய உயிர்சேதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.