நெல்லின் ஈரப்பதம் குறித்து, மத்திய உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நடப்பு நெல் கொள்முதல் சீசன், கடந்த செப்., 1ல் துவங்கியது. இந்த சீசனில், 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தஞ்சை, திருவாரூர் உட்பட பல மாவட்டங்களில், குறித்த காலத்தில் நெல் கொள்முதல் செய்யவில்லை. இதனால், மழையில் நெல் நனைந்ததால் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. எனவே, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, தமிழக அரசு சில தினங்களுக்கு முன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய மூன்று குழுக்களை மத்திய அரசு நியமித்தது. இதில் ஒரு குழுவினர் மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி மற்றும் சோழவந்தான் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் உள்ள பகுதிகளில் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின், அடுத்த பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டனர். இக்குழுவினர், திறந்தவெளியில் குவிக்கப்பட்டிருந்த நெல் குவியலை அள்ளி, ஈரத்தன்மையை அறிந்தனர்; கருவியில் நெல்லை வைத்து ஈரப்பத சதவீதத்தை அளவிட்டனர். ஆய்வகத்தில் சோதனை செய்ய, சிறிய பாக்கெட்டிலும் நெல்லை எடுத்து சென்றனர்.

அப்போது அங்கிருந்த விவசாயிகள், மழையால் அறுவடைப் பணிகள் தாமதமாகி வருகிறது. அறுவடை செய்த நெல்லை காய வைக்க முடியவில்லை. எனவே நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
வாடிப்பட்டி சோழவந்தான் முழுவதும் மழையால் வயல்கள் அனைத்தும் மூழ்கி உள்ளன. தண்ணீரை வடிய வைக்க முடியவில்லை. மழையால் அறுவை பணிகள் பாதித்தது. இதனால் ஏக்கருக்கு 5 மூட்டை நெல் மட்டுமே அறுவடை செய்ய முடிந்தது. ஏக்கருக்கு 60 மூட்டை நெல் கிடைத்த நிலையில் தற்போது 5 மூட்டை மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம். எனவே ஈரப்பதத்தை அதிகரித்துத்தருவதோடு, மத்திய அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.














; ?>)
; ?>)
; ?>)