அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்குட்பட்டது, முனியங்குறிச்சி மற்றும் மு.புத்தூர் கிராமங்கள்.இந்த கிராமங்களில் நெடுஞ்சாலை துறையினர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புத்தூர் தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தின் நுழைவாயில் முதல் முனியங்குறிச்சி வரை குறுகிய சாலையை அகலப்படுத்தி தார் சாலை அமைத்துள்ளனர் .


இந்த சாலை வழியாக அரியலூர், வி. கைகாட்டிக்கு எண்ணற்ற இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் வெளியூருக்கு கூலி வேலைக்கு சென்று இரவு வீடு திரும்புகின்றனர். மேலும் இதே வழிதடத்தில் இரண்டு அரசு பேருந்துகள், ஒரு மினி பேருந்து மற்றும் பள்ளிகள் , கல்லூரிகள் பேருந்துகள், வேன்கள் சென்று வருகிறது .மு.புத்தூர் கிராமத்தில் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தின் நுழைவாயில் அருகே சாலையின் மேற்கு புறத்தில் ஆபத்தான வளைவு பகுதியில் சிறிய ஏரி உள்ளது.

இந்த ஏரிக்கரையில் நெடுஞ்சாலை துறையினர் சாலை அமைத்த போது பொதுமக்களின் பாதுகாப்பை கருதி எவ்வித தடுப்புச் சுவரும் அமைக்கவில்லை. மேலும் இப்பகுதியில் மின்விளக்கு வசதி இல்லை. இரவு நேரங்களில் இவ்வழியே எதிரே வேகமாக வரும் வாகனங்களுக்கு வழி விட்டு ஒதுங்கும்போது ஏரியின் உள்ளே இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்துக்கள் ஏற்படும்,பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது.
எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் உடனடியாக மு.புத்தூர் கிராமத்தின் ஏரிக்கரை பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி விபத்துக்கள் நிகழாமல் இருக்க தடுப்பு சுவர் அமைத்திட முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




