புதுக்கோட்டை மாநகரில் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பூமாலை வணிக வளாகத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பணி புரியும் பணியாளர்கள் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதுகுறித்து இந்த பணியாளர்களின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூறுகையில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசின்
சார்பில் சம வேலைக்கு சம ஊதியம், தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ்
நியாயமான ஊதியம், தற்போதுள்ள விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதிய உயர்வு, மற்றும் தொழிலாளர் நலன் சார்ந்த கோரிக்கைகளை உள்ளடக்கி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு வாழ்வாதார ஊரக இயக்கத்தின் கீழ் பணி புரியும் வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு தற்போது ரூபாய் 12000 மற்றும் வட்டார மேலாளர்களுக்கு ரூபாய் 15,000 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. பணியில் சேர்ந்த காலம் தொடங்கி இதுதான் ஊதியம் என்கிற போது இப்போது உள்ள விலைவாசி உயர்வுக்கு அது போதாத நிலையில் இருக்கிறது.
இதில் பணிபுரிபவர்களுக்கு மேலாண்மை அலுவலகங்களின் மூலம் ஊதியம் பிடித்தல், பணியின் தரம் குறைத்தல், திடீரென்று பணியில் இருந்து நீக்குதல் போன்ற மனிதாபிமானமற்ற செயல்களை கைவிட வேண்டும். அது மட்டுமல்ல அது ஏற்கனவே எங்களுக்கு வழங்கப்பட்டு வந்த பணியை விட கூடுதல் பணியாக காலை உணவு திட்டம், வேளாண் உழவர் திட்டம், மருத்துவத் திட்டம், குடும்ப நலத்திட்டம், தேசிய அளவிலான பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு எதிரான பிரச்சாரங்கள், மக்கள் கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் போன்ற அளவுக்கு அதிகமான பணி சுமைகள் கொடுப்பதையும் பணியாளர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

புதிய புதிய ஒப்பந்த பணியாளர்களை நியமிப்பதை விடுத்து மகளிர் மேம்பாட்டு ஆணையம் சென்னை தலைமைச் செயலகத்தின் கீழ் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு பணி நிரந்தரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
காலை உணவு திட்டம், மக்களை தேடி மருத்துவ முகாம் திட்டம், தாயுமானவர் திட்டம், மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டம் போன்ற பணிகளுக்கு கூடுதலான ஊக்கத்தொகை மற்றும் பயணப்படி தொலைபேசி கட்டணம் போன்றவற்றை கூடுதலாக வழங்கி தர வேண்டும்.
இதில் பணிபுரியும் வட்டார மேலாளர்கள் உட்பட அனைவருக்கும் விபத்து காப்பீடு, ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு போன்றவற்றை செய்து தர வேண்டும். பணிக்காலத்தில் துரதிஷ்டவசமாக பணியாளர்கள் இறக்க நேரிட்டால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கருணைத்தொகை வழங்க வேண்டும். இது போன்ற எங்களது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். விரைவில் எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்வரும் 20 ஒன்னு 2026 அன்று மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டமும் நடத்த இருக்கிறோம். அதற்கான தீர்மானங்களை இயற்றி மாநில அரசுக்கும் சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்களுக்கும் அனுப்பி இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.




