தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில், அ.தி.மு.க., மத்திய மாவட்டம் சார்பில், நெல் கொள்முதல் செய்யாத அரசை கண்டித்து, மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துக்கொண்ட முன்னாள் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: டெல்டா பகுதியில் குறுவை நெல் விளைந்து மழையில் நனைந்து வீணாகி வருகிறது. விவசாயிகள் பெரிதும் கவலைக்குள்ளாகியுள்ளனர். உடனே, விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். கையாளதாக தி.மு.க., அரசின் முதல்வர் ஸ்டாலின், விவசாயிகளை வஞ்சித்து வருகிறார். நெல் கொள்முதல் செய்யாமல், சாலைகளில் நெல் கொட்டிக்கிடக்கிறது.

டெல்டாவில் 906 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால், பாதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் செய்யவில்லை. இதற்கு காரணம் சாக்கு பாற்றக்குறை, பணியாளர்கள் இல்லை என்பது தான். 5 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டால், அங்கு இருந்து அந்த மூட்டைகளை இயக்கம் செய்ய வேண்டும். ஆனால். 5 ஆயிரம் மூட்டையும் கொள்முதல் நிலையத்தில் அப்படியே தேங்கி இருக்கிறது. மேலும், விவசாயிகள் கொண்டு வந்த நெல்லும் மழையில் நனைந்துக்கொண்டு இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பழனிசாமி ஆட்சியில் விவசாயிகளுக்கு, இப்படி ஒரு மோசமான நிலை இருந்தது கிடையாது.
உணவுத்துறை அமைச்சர் ஆய்வு செய்து விட்டு சென்ற பிறகும் நிலைமை மாறவில்லை. 17 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்வதாக சொல்லுகிறார்கள். ஆனால், மழையால் 17 சதவீதம் ஈரப்பதம் இருக்காது. உணவுத்துறை அமைச்சர் 17,16 சதவீதம் தான் ஈரப்பதம் இருப்பதாக மோசடியான வார்த்தையை கூறியுள்ளார். 20க்கு மேல் தான் ஈரப்பதம் இருக்கும். 22 சதவீத ஈரப்பதம் வரை உள்ள நெல்லை உடனே கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகள் பல இடங்களில் சாலை மறியல் செய்து வருகிறார்கள். விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். விவசாயிகளை கண்டுக்கொள்ளாத அரசு மீண்டும் ஆட்சிக்கு வர முடியுமா? 2026ல் அ.தி.மு.க., ஆட்சியையும், பழனிசாமி முதல்வராக வருவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது இவ்வாறு அவர் கூறினார்.