கோவையில் பெய்து வரும் தொடர் மழை : காய், கறிகளின் வரத்து குறைந்து உள்ளதால், விலை உயர வாய்ப்பு – விவசாயிகள், பொதுமக்கள் கருத்து !!!
ஒவ்வொரு ஆண்டும், வெயில் காலம் முடிவு அடைந்து, மே மாத இறுதி அல்லது ஜூன் மாத துவக்கத்தில் தென்மேற்கு பருவ மழை துவங்கும். கேரளாவில் மழை துவங்கிய சில நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய மாவட்டங்களில் மழை துவங்கும். இவ்வாண்டு, சுமார் 10 நாட்களுக்கு முன்பாகவே கேரளாவில் தென் மேற்கு பருவமழை துவங்கியது. மேலும் வங்கக்கடலில் உருவான தாழ்வு நிலை காரணமாகவும், கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 10 நாட்களுக்கும் மேலாக கன மழை கொட்டியது.

குறிப்பாக கோவை மாவட்டத்தில், வேளாண் நிலங்கள் அதிகம் உள்ள புறநகர்ப் பகுதிகளில் விட்டு, விட்டு கன மழையும், தொடர் சாரல் மழையும் பெய்தது.
இதனால் ஆறுகள் மற்றும் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதன் இடையே இந்தாண்டு வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த போதும், முக்கிய காய், கறிகளான தக்காளி, வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலைகள் அதிரடியாக குறைந்தது. வரத்து அதிகரிப்பால், தக்காளி கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரையிலும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரையிலும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரையிலும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் மார்க்கெட்டுகள் மட்டுமின்றி வாகனங்களிலும் 6 கிலோ முதல் 7 கிலோ வரை 100 ரூபாய்க்கு தக்காளியும், 4 முதல் 5 கிலோ 100 ரூபாய்க்கு வெங்காயமும் விற்பனை செய்யப்பட்டது.
இருப்பினும் பிற காய், கறிகளான கேரட், பீன்ஸ், பீட்ரூட், உருளைக் கிழங்கு உள்ளிட்ட மலைக் காய் கறிகளும், சுரைக்காய், பூசணிக்காய், பாகற்காய், பீர்க்கங்காய், வெள்ளரிக்காய், அரசாணிக்காய், பச்சை மிளகாய், உள்ளிட்ட சம தளக் காய்கறிகளும் நிலையான விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் இடையே தொடர் மழை காரணமாக பல இடங்களில் காய்கறிகளின் வரத்து கடுமையாக பாதிகப்பட்டு உள்ளது.
தற்போது மழைக் காலம் என்பதால், விளை நிலங்களிலும் இருந்து உழவர் சந்தைகளுக்கு வரும் காய், கறிகளின் வரத்து கணிசமாக குறைந்து உள்ளது.