மேட்டுப்பாளையத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்ட நிகழ்ச்சியில், இரண்டு அதிமுக நிர்வாகிகளிடமிருந்து இரண்டு லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் “மக்களை காப்போம்… தமிழகத்தை மீட்போம்… ” என்ற முழக்கத்தோடு அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களை சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக பத்திரகாளி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், பின்னர் ஒரு தனியார் மண்டபத்தில் விவசாயிகளை சந்தித்தார். அப்பொழுது அவருக்கு வரவேற்பு அளிக்க கட்சி நிர்வாகிகள் திரளானோர் அங்கு திரண்டு வரவேற்பு அளித்தனர்.
இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்திய மர்ம நபர்கள் அந்த கூட்டத்திற்குள் புகுந்து அதிமுக நிர்வாகிகள் வைத்திருந்த சுமார் 2 லட்சம் ரூபாய் அளவில் பிட் பாக்கெட் அடித்து கொள்ளையடித்துள்ளனர்.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தங்கராஜ் மற்றும் நெல்லித்துறை பகுதியைச் சேர்ந்த நிர்வாகி ஆனந்த் என்பவரும் அது பேண்ட் பாக்கெட்டுகளில் வைத்திருந்த தலா ஒவ்வொரு லட்சம் என இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை பிளேடால் கிழித்து பிட்பாக்கெட் அடித்து விட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் பணம் திருடப்பட்டு இருப்பது தெரிந்து அதிமுக நிர்வாகிகள் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில், அது குறித்து புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.