கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 55 வது வார்டு S.I.H.S காலனி பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் 12 வருடங்களுக்கு மேலாகியும் கட்டி முடிக்கப்படாததால் அந்தப் பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மேலும், குடிநீர் குழாய் மற்றும் மின்சார இணைப்புக்காக அவ்வப்போது தோண்டப்படும் குழிகள் சரியாக மூடப்படாததாலும், தற்காலிகமாக அமைக்கப்பட்ட மண் சாலை சரியாக இல்லாததாலும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் மேம்பால பணிகள் காரணமாக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்குவதால் அதையும் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. அவ்வப்போது அதிகாரிகள் பெயருக்கு மட்டுமே ஆய்வு செய்து கவனம் செலுத்தாமல் இருப்பதால் அதன் கட்டுமான பணிகள் தொய்வுற்று இருக்கிறது. இது குறித்து கடந்த 10 வருடங்களாக பொதுமக்கள் பல அதிகாரிகளை அணுகியும் போராட்டங்களை முன்னெடுத்தும் வந்த நிலையில் எந்த ஓர் தீர்வும் கிடைக்கவில்லை.

கட்டுமான பணிகள் இடையூறு காரணமாக பேருந்துகள் சரிவர வருவதில்லை ஆதலால் அந்தப் பகுதி மக்களின் அன்றாட தேவைகளும் நகர்வுகளும் முழுமையாக பாதிக்கப்படுவதால் பெரும் இன்னலுக்கு உள்ளாகின்றனர். எனவே, பொதுப்பணித்துறை, மின்சார வாரியம், மாநகராட்சி நிர்வாகம், ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்பெறும் வகையில் விரைவாக முடிக்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதில் கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் S. யுவராஜ் , மாவட்ட நிர்வாகிகள் மணிகண்டன் இணைச் செயலாளர் குகனேஷ்வரன் துணை செயலாளர் தகவல் தொழில்நுட்ப அணி சரவணன், பயிற்சி பாசறை வினோத் பிரியா சாந்தாமணி, சிங்காநல்லூர் பகுதி செயலாளர் நரேஷ், இணைச் செயலாளர் பிரேம் குமார், பொருளாளர் விஜயன் 55 வது வட்ட செயலாளர் கார்த்திகேயன், 54 வது வட்ட செயலாளர் ராகவன் நிர்வாகிகள் ரகுநந்தன், விக்னேஷ் விமலா கல்பனா மற்றும் பலர் உடன் இருந்தனர்.