கோவையில் உரிய கட்டணம் செலுத்தியும் கல்லூரி நிர்வாகம் மீண்டும் கட்டணம் செலுத்த வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு: அசல் சான்றிதழை பெற்றுத்தரக் கோரி மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு
கோவை கரியம்பாளையத்தில் உள்ள நைருதி கலை அறிவியல் கல்லூரியில் இளம் வணிகவியல் முடித்த மாணவ, மாணவியர் தங்களது அசல் சான்றிதழ்களை பெற்றுத் தரக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். உரிய கட்டணம் செலுத்தியும் கல்லூரி நிர்வாகம் மீண்டும் கட்டணம் செலுத்த வற்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை கரியம்பாளையம் பகுதியில் நைருதி கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தக் கல்லூரியில் B.Com (CA), B.Com (PA) துறையில் பயின்று வந்த மாணவ மாணவியர்கள் 17 பேர், இறுதிப் பருவ கட்டணத்தை செலுத்த முயற்சித்த போது (Server Issue) ஏற்பட்டதன் காரணமாக நேரடியாக துறைத் தலைவர் சுரேஷ் குமாருக்கு (GPay) இணைய பரிவர்த்தனை மூலம் அனுப்பியதாக கூறுகின்றனர். தற்போது இளங்கலை படிப்பை முடித்துவிட்டதன் அடிப்படையில், தங்களது அசல் சான்றிதழ்களை வழங்கும்படி கேட்டால், கல்லூரி நிர்வாகம் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி, சான்றிதழ்களை தர மறுப்பதாகவும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக ₹10,000 முதல் ₹22,000 வரை கட்டணமாக செலுத்தும் படி கூறுவதாகவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அன்னூர் வட்டாட்சியரிடம் புகார் அளித்ததாகவும் ஆனால் வட்டாட்சியர் கட்டணத்தை செலுத்தும் படி அறிவுரை கூறியதாகவும் மாணவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே முதல்வரின் கவனத்தின் அடிப்படையில் தான் கல்லூரி கட்டணம் செலுத்தியதாகவும் தற்போது மீண்டும் கட்டணம் செலுத்த தங்களிடம் பணம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ள அவர்கள், மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு தங்களது அசல் சான்றிதழ்களை பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.