• Fri. May 3rd, 2024

கண் துடைப்புக்காக மக்கள் சபை கூட்டம்.., கவுன்சிலர்கள் பொதுமக்கள் கொந்தளிப்பு…

ByKalamegam Viswanathan

Dec 10, 2023

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இதில், திமுக சார்பில் 12 கவுன்சிலர்களும், அதிமுகவினர் சார்பில் 6 கவுன்சிலர்களும் உள்ளனர்.
இந்த நிலையில், பேரூராட்சிகளில் நடைபெறும் கூட்டங்களிலும், பேரூராட்சி சார்பாக நடைபெறும் பணிகளிலும் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக திமுகவைசேர்ந்த கவுன்சிலர்களே அவ்வப்போது புகார் தெரிவிப்பதும் , பேரூராட்சி அதிகாரிகள் புகார் தெரிவித்தவர்களை அலுவலகத்திற்கு அழைத்து சமரசம் பேசி அனுப்புவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேரூராட்சியின் வார்டு பகுதிகளில் மக்கள் சபை கூட்டம் நடைபெறும் என்று பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், ஒவ்வொரு வார்டிற்கும் தனித்தனியாக கூட்டங்கள் நடத்தாமல் 3 அல்லது 4 வார்டுகளுக்கு ஒரு இடத்தில் கூட்டங்களை நடத்துவதாக அறிவித்து பொதுமக்களை வரவழைத்தனர். அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகள் மற்றும் பேரூராட்சி சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதனை தொடர்ந்து, பொதுமக்கள் கூறிய குறைகளை பேரூராட்சி அதிகாரிகள் கூட்ட தீர்மானமாக ஏற்றி 30 நாட்களில் அனைத்து குறைகளையும் சரி செய்வதாக கூறிவிட்டு சென்றனர்.
இந்த நிலையில், இன்று 10 12 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மீண்டும் பேரூராட்சி சார்பில் மக்கள் சபை கூட்டம் அனைத்து வார்டுகளிலும் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இது குறித்து பல கவுன்சிலர்களுக்கு கூட்டம் நடைபெறும் தகவலை முறையாக தெரிவிக்காத நிலையில், பேரூராட்சியின் இந்த செயலுக்கு கவுன்சிலர் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதன் காரணமாக மக்கள் சபை கூட்டத்தை நடத்தினால் கண்டிப்பாக பிரச்சனைகள் பூதாகரமாக வெடிக்கும் என்று நினைத்த சோழவந்தான் பேரூராட்சி அதிகாரிகள் கூட்டத்தை நடத்தாமல், நடத்தியதாக கணக்கு காண்பிக்க ஏற்பாடுகள் செய்ததாக தெரிகிறது .

ஆனால், ஒரு சில வார்டு கவுன்சிலர் மூலம் பொதுமக்களுக்கு கூட்டம் நடைபெறுவதாக தெரிவித்து இருந்த நிலையில், பேரூராட்சியின் ஒவ்வொரு வார்டு பகுதிகளுக்கும் பொதுமக்கள் சென்று விசாரித்த வண்ணம் இருந்தது . பேரூராட்சி நிர்வாகத்தின் மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது.
மேலும், இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, அதிகாரிகள் வருவார்கள் கூட்டம் நடைபெறும் என்று திரும்பத் திரும்ப ஒரே பதிலை சொல்லிக் கொண்டிருந்தார்கள். மேலும், பொது மக்களுடன் சேர்ந்து சில செய்தியாளர்களும் கூட்டம் நடைபெறும் இடத்தில், காத்திருந்த போதும் கூட்டம் எதுவும் நடைபெறாததால், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஆகையால், சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள் கூட்டம் நடைபெறுவதை முறையாக முன்கூட்டியே சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலருக்கு தெரிவித்தும், அந்தந்த பகுதிகளில் விளம்பர போர்டுகள் மூலம் பொதுமக்களுக்கும் கூட்டம் நடைபெறுவது சம்பந்தமாக தகவல் தெரிவித்தும் முறையாக பொதுமக்களின் பிரச்சனைகளை கேட்டு அதற்கான தீர்வுகளை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், 10 ஆம் தேதி நடைபெற்றதாக அதிகாரிகள் கூறிய நிலையில், பொதுமக்கள் தரப்பிலிருந்து அப்படி ஒரு கூட்டம் நடைபெறவில்லை என புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. ஆகையால், இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் எஸ். சேதுராமன் ஆகியோர் உரிய விசாரணை செய்து, சம்பந்தப்பட்ட வார்டு பகுதிகளில் நேரில் சென்று பொது மக்களிடம் கேட்டு கூட்டம் நடக்கவில்லை என்றால் ,அதற்கு காரணமான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளனர் .
மேலும், ஒரு சில வார்டுகளில் பொதுமக்கள் கவுன்சிலர்கள் வீட்டிற்கு சென்று ஏன் கூட்டம் நடத்தவில்லை என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பொதுமக்கள் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிலர் இது குறித்து, முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் தெரிவிக்க இருப்பதாகவும் கூறி சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *