• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பாலஸ்தாபன கும்பாபிஷேக வைபவம் – 19 விமானங்களுக்கு பாலாலயம்..,

ByKalamegam Viswanathan

Nov 23, 2023

பிரசித்தி பெற்ற மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் சுவாமி, அம்பாள் சன்னதி விமானங்கள், விநாயகர் பாலதண்டாயுதபாணி, எல்லாம்வல்ல சித்தர், துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பைரவர், நவக்கிரகம் உள்ளிட்ட சந்ததிகள் என 19 சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் செய்து வைப்பதற்கான பாலஸ்தாபன கும்பாபிஷேக வைபவம் இன்று நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான ராணி சாஹிபா டி.எஸ்.கே. மதுராந்தகி நாச்சியார் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் இக்கோயிலில், இந்த வைபவம் நேற்று புதன்கிழமை (நவம்பர் 22) காலையில் தொடங்கியது. அனுக்கை பூஜை, எஜமான சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்ணியாஹவாசனம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், திரவியாஹூதி, பூர்ணாஹூதி உள்ளிட்ட நிகழ்வுகளோடு மகா தீப ஆராதனை உடன் நேற்று காலையில் இந்த நிகழ்வு தொடங்கியது.

மாலையில் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாஹவாசனம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், விமானங்கள் கலாஹர்ஷணம் உள்ளிட்ட வைபவங்களோடு முதற்காலையாக பூஜை தொடங்கியது. பின்னர், திரவியாஹூதி, பூர்ணாஹூதி உள்ளிட்ட நிகழ்வுகளோடு மகா தீப ஆராதனை நடைபெற்றது.

இன்று அதிகாலையில் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய இந்த வைபவம் புண்ணியாஹவாசனம், இரண்டாம் காலை கால பூஜை திரவியாஹூதி, மகா பூர்ணாஹூதி, தீப ஆராதனையோடு கடங்கள் புறப்பாடு நடந்தது. அதன் பின்னர் காலை 10:30 மணி அளவில் விமானங்களுக்கு பாலஸ்தாபன மகா கும்பாபிஷேக வைபவம் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் இரண்டாம் ஸ்தானிகர் ‘சிவாகம சிரோன்மணி’ எஸ்.கே. ராஜா பட்டர், ஸ்தானிகப் பட்டர் சி.ஹாலாஸ்ய நாதன், தல அர்ச்சகர்கள் ‘சிவாகம ரத்தினம்’ சிவாகம ரத்தினம் சிவ ஸ்ரீ கல்யாணசுந்தர பட்டர், இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் ஸ்தல அர்ச்சகர் எஸ்.தர்மராஜ் சிவம் ஆகியோர் பாலஸ்தாபன கும்பாபிஷேக வைபவ பூஜைகளையும் முன்னின்று நடத்தினர்.

ஸ்தல அர்ச்சகர் எஸ்.தர்மராஜ் சிவம் கூறுகையில், ” ஆகம விதிப்படி ஒவ்வொரு ஆலயத்திற்கும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்து வைக்க வேண்டும். அதன்படி இக்கோயிலுக்கும் விரைவில் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னோடியாக பாலாலயம் செய்விக்கும் நிகழ்வு நடக்கும். இன்று ஆகம விதிப்படி பாலாலயம் செய்து வைக்கப்பட்டது. இதன் பின்னர் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கி நடக்கும். திருப்பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர் கோயிலின் கும்பாபிஷேக வைபவம் நடக்கும்” என்றார்.

மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்கு மிக அருகிலேயே அமைந்துள்ள இந்தக் கோயில், மதுரையில் மீனாட்சியை திருமணம் செய்து மதுரையின் மன்னராக சிவபெருமான் முடிசூடும் முன்பாக ‘தன்னைத்தானே சிவ பூஜை’ செய்து கொண்ட கோயில் இது. அதனால், தமிழ்நாடு மட்டுமின்றி வட மாநிலங்களில் இருந்தும் மதுரைக்கு வரக்கூடிய பக்தர்கள் இந்த கோயிலையும் வணங்கி விட்டு செல்கிறார்கள். கருவறையில் சிவபெருமான் லிங்க வடிவிலும், மீனாட்சியோடு அமர்ந்து சிவபூஜை செய்யும் உருவ வடிவத்திலும் கருவறை அமைந்துள்ளது. இத்தகைய தனி சிறப்புகளால் மதுரையில் வசிக்கும் பக்தர்களிடையே மிகுந்த அபிமானத்தை பெற்ற கோவிலாக இக்கோயில் திகழ்கிறது.

கோயில் கண்காணிப்பாளர் எஸ்.கணபதிராமன், கௌரவ கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.சாம்பசிவன், மேலாளர் பா.இளங்கோ உள்ளிட்ட நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.