மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒத்தக்கடை ஊராட்சி சீதாலட்சுமி நகர் மற்றும் கொடிக்குளம் கிராமத்தில் புதிய நியாய விலை கடைகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவிக்கையில்: –
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் மொத்தம் 347 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது. இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படவுள்ளது.

இதனை முழுமையாக மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். கலைஞர் மகளிர் உரிமை புதிதாகப் பெறுவதற்கும் விடுபட்டவர்களுக்கும் இந்த முகாமில் மனுக்கள் பெறப்படுகிறது. வாரந்தோறும் சனிக்கிழமை அன்று நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் பல்நோக்கு சிகிச்சைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று குடிமை பொருட்கள் வழங்கப்படுகிறது.
A2401 ஒத்தக்கடை கூட்டுறவு நகர கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ஒத்தக்கடை முழுநேர நியாய விலைக் கடையில் 1703 குடும்ப அட்டைதாரர்கள் உணவு பொருட்கள் பெற்று வந்தனர். இதில், சீதாலட்சுமி நகர் பகுதியில் உள்ள 400 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்யும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 13.56 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை திறக்கப்பட்டுள்ளது.

மேலும், கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடிக்குளம் கிராமத்தில்
A2968 சிட்டம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள கொடிக்குளம் கிராமத்திற்கு உட்பட்ட 492 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்யும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 9.97 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை திறக்கப்பட்டுள்ளது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) வானதி மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சதீஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.