ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருவதால் நாடு முழுவதும் அதிக அளவில் சூதாட்டங்கள் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதனை தடுக்கும் விதமாக கோவை மாநகர முழுவதும் கடந்த சில நாட்களாக சூதாட்டங்களில் ஈடுபடும் நபர்களை காவல் துறையினர் கண்காணித்து கைது செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேஸ்கோர்ஸ் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் காந்திபுரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து கோவையில் சட்டவிரோதமாக சூதாட்டங்களில் ஈடுபடுகின்ற என காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் வடவள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போராட்டம் நடைபெறுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து காவல் துறையினர் வடவள்ளி கருப்பராயன் கோயில் அருகே சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது சொகுசு கார் ஒன்றில் செல்போன், நோட்டு புத்தகங்களை வைத்து சந்தேகப்படும் படி இருந்த நபரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்பொழுது அவர் முன்னுக்கு, பின் முரணாக பதில் அளித்தார். இதனை அடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அவர் சின்னியம்பாளையம் டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த பசுபதி என்பதும், அவர் 3 நெம்பர் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை அடுத்து அவரிடம் இருந்து ரூபாய் 11.64 லட்சம் பணம், ஐ போன் மற்றும் சொகுசு கார் ஒன்றை காவல் துறையினர் பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவையில் இளைஞர்களை போதைப் பொருட்கள் மற்றும் சூதாட்டம் போன்ற சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருவதால் பெற்றோர் மற்றும் பொது மக்கள் இடையே அச்சத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி வருகிறது.