• Thu. May 2nd, 2024

100 சதவீத வாக்கு பதிவு குறித்து, கோவை சரவணம்பட்டி பி.பி.ஜி.கல்லூரி மாணவ, மாணவிகள் இந்திய வரைபடம் போல அணிவகுப்பு

BySeenu

Apr 10, 2024

கோவை மாவட்டத்தில் 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.. இதன் ஒருபகுதியாக கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி.தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் நூறு சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இதில், துணை தலைவர் அக்‌ஷய் தங்கவேலு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாணவ, மாணவிகள் இந்திய வரைபடம் போல அணிவகுத்து நின்றதை பார்வையிட்டார். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஒரு விரல் மை மையமாக வைத்து இந்திய வரைபடம் போல அணிவகுத்து நின்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

தொடர்ந்து கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் துவக்கி வைத்தார். பின்னர் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என மாணவ,மாணவிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்,

கல்லூரிகளில் முதல் முறை வாக்காளர்கள் அதிகம் இருப்பதால் கல்லூரிகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அதிக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதாக கூறிய அவர், மாவட்டத்தில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் விதமாக கடந்த முறை வாக்கு பதிவு குறைந்த இடங்களில் அதிக கவனம் செலுத்தி வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் இந்திரா, கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *