கோவையில் வட மாநில வாலிபர்களை கடத்திச் சென்று பணம் பறித்து ஆட்டோ டிரைவர்கள் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பலர் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் அடிக்கடி தங்கள் சொந்த ஊருக்குச் சென்று வருகிறார்கள். இந்நிலையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த குஷால் பிஷ்வாஸ், அலிகாதர் சேக், உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஷிவக்குமார் ஆகியோர் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று விட்டு ரயில் மூலம் கோவை திரும்பினர்.

பின்னர் நேற்று காலை கோவை வந்தவர்கள் தாங்கள் வேலை செய்து வரும் மதுக்கரை செல்வதற்காக ரயில் நிலைய முன்பு நிறுத்தப்பட்டு உள்ள ஆட்டோ டிரைவர்களிடம் வாடகைக்கு கேட்டு உள்ளார். அப்பொழுது ஆட்டோ டிரைவர்களான உக்கடம், புல்லுக்காட்டு பகுதியைச் சேர்ந்த முகமது அசாருதீன், தென்னம்பாளையம் நவுபால் பாஷா, செல்வபுரம் செந்தில் குமார் ஆகியோர் வடமாநில வாலிபர்களும் வாடகை பேசி அழைத்துச் சென்றனர். அதன்படி செந்தில்குமார் தனது ஆட்டோவில் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்களையும், முகமது அசாருதீன், நவுபால் பாஷா ஆகியோர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்களையும் அழைத்துச் சென்றனர்.

ஆனால் அவர்கள் வடமாநில வாலிபர்கள் கூறிய இடத்திற்கு அழைத்துச் செல்லாமல், வேறு இடத்திற்கு கடத்திச் சென்றனர். பின்னர் அவர்கள் ஆவாரம்பாளையம் மேம்பாலயத்தின் கீழ் பகுதியில் அழைத்துச் சென்று அவர்களை தாக்கியதுடன், மிரட்டி ரூபாய் 13 ஆயிரத்தை பறித்துக் கொண்டனர். அங்கு இருந்து சென்ற வட மாநில வாலிபர்கள் தாங்கள் வேலை செய்யும் பகுதியில் உள்ளவர்களிடம் தெரிவித்தனர். உடனே இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல் துறையிடம் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து . ஆய்வாளர் கந்தசாமி தலைமையில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
அதில் அந்த மூன்று பேரும் வட மாநில வாலிபர்களை கடத்தி பணம் பளித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து காவல் துறையினர் ஆட்டோ டிரைவர்களான செந்தில்குமார், முகமது அசாருதீன், நவுபால் பாஷா ஆகியோரை கைது செய்தனர். அத்துடன் இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் மூன்று ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.