• Fri. Jan 16th, 2026
[smartslider3 slider="9"] Read Now

சென்னை மழைநீர் வடிகால் கட்டமைப்பில் புது வடிவமைப்பு

Byமதி

Dec 7, 2021

வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னையில் அக்டோபர் 25ம் தேதி முதல் தொடர் கனமழை பெய்தது. இதில், நவம்பர் மாதத்தில் மட்டும், 105 செ.மீ., அளவிற்கு கனமழை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத தொடர் மழையால், மாநகரில் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கின.

தி.நகர், மாம்பலம், திருவொற்றியூர், மணலி, கொளத்துார், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில், மழைநீர் வடிய ஒரு வாரம் வரை ஆனது. இதில், தி.நகர், மாம்பலம் பகுதியில், மழைநீர் வடிகால் கட்டமைப்பு இருந்தும், நீர் வடியாமல், மோட்டார் பம்புகள் வாயிலாக மழைநீர் அகற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, சென்னையில் மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளில், மழைநீர் கட்டமைப்பு ஏற்படுத்தவும், இணைப்பு இல்லாத பகுதிகளில் இணைப்பை ஏற்படுத்தி, வரும் காலங்களில், மழைநீர் தேங்காத அளவிற்கு கட்டமைப்பை உருவாக்கவும், மாநகராட்சி அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி முதற்கட்டமாக, திரு.வி.க.நகர் மண்டலம், புளியந்தோப்பு பகுதியில், புவியியல் மேற்பரப்பிற்கு ஏற்ப, புதிய மழைநீர் வடிகால் 7.10 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளது. புளியந்தோப்பு பகுதியில் ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால், மணிக்கு 2 முதல் 3 செ.மீ., மழை பெய்தால், அந்த நீரை வெளியேற்றும் கொள்ளளவு கொண்டதாக உள்ளது.

மேலும், தற்போது மணிக்கு 7 செ.மீ., மழை பெய்தால் நீர் வடியும் வகையில் உள்ள கட்டமைப்பை, இனி 10 செ.மீ., மழைக்கு ஏற்ப மாற்றப்பட உள்ளது. மேலும், வடிகால்களை எளிதாக துார் வாரும் வகையில், 2.5 மீட்டர் இடைவெளியில், ‘மேன் ஹோல்’ எனப்படும் ஆள்நுழைவு குழி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.