இராஜபாளையத்தில் கரிசல் இலக்கிய கழகம், விருதுநகர் மாவட்ட நூலக ஆணைக் குழு, விருதுநகர் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், பகிர்வு அறக்கட்டளை மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் 40-ஆவது தேசிய புத்தக கண்காட்சி துவக்க விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கரிசல் இலக்கியக் கழகம் செயலாளர் மருத்துவர் அறம் தலைமை வகித்தார். ராம்கோ குழும உதவி துணைத் தலைவர் எஸ். ஆர்.ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.முன்னதாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.ஏ. கே.டி கல்வி குழுமங்களின் தாளாளர் ஏ.கே.டி. கிருஷ்ணமராஜூ முதல் விற்பனையை துவக்கி வைத்தார். நவபாரத் பள்ளி தாளாளர் நாராயணராஜா முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார்.

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி முன்னாள் முதல்வர் வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக ஆட்சி குழு உறுப்பினர் வழக்கறிஞர் லட்சுமி நாராயணன், பகிர்வு அறக்கட்டளை நிறுவனர் செல்வகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் கவிஞர் நித்யா, கவிஞர் நந்தன் கனகராஜ்,
மற்றும் கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். முடிவில் கவிஞர் கண்மணி ராசா, மண்டல மேலாளர் மகேந்திரன் ஆகியோர் நன்றி கூறினார். இந்த கண்காட்சி இன்று முதல் வரும் பிப்ரவரி 5ம் தேதி வரை ஒரு மாதம் நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சியில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பல்வேறு தலைப்புகளில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.




