திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடியில் அருள்மிகு முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சுவாமிகளின் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து காப்பு கட்டி பக்தர்கள் விரதத்தை தொடங்கினர். தினமும் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான புரவி எடுப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக உலுப்பகுடி பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட வல்லடியார், கரகம், கருப்பசாமி, முன்னோடி கருப்பு, மதிலை, குதிரை, கன்னிமார் சிலைகளுக்கு கண் திறக்கப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பின்னர் 500 க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள் அனைத்தும் வர்ணகுடைகள், தீவட்டி பரிவாரங்களுடன் வானவேடிக்கைகளோடு கோவிலை சுற்றி வலம் வந்து பின்னர் ஊர்வலமாக சென்று கரந்தமலை அடிவாரத்தில் உள்ள கோவில் இருப்பிடம் போய் சேர்ந்தது.
இதில் உலுப்பகுடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.