திண்டுக்கல் மாவட்டம் பழனி தைப்பூச திருவிழா கடந்த 26 ம் தேதி முதல் 10 நாட்களுக்கு நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வு நாளை திருக்கல்யாணமும் , நாளை மறுநாள் தேரோட்டமும் நடைபெறவுள்ள நிலையில் தைப்பூச திருவிழாவிற்காக தமிழகம் முழுவதும் இருந்து பாதயாத்திரையாக முருக பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பழனி அடுத்த ஆயக்குடி அருகே திண்டுக்கல் சாலையில் நடந்து வரும் முருக பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் மருத்துவ உதவிகள் செய்தனர்.

காயிதே மில்லத் அறக்கட்டளை நிறுவனர் அஜ்மத் அலி மற்றும் ஆயக்குடி ஜமாத் சார்பில் 4 ம் ஆண்டு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு கால் வலியை போக்கக்கூடிய மருந்துகள், மற்றும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இஸ்லாமியர்கள் நெடுந்தூரம் நடந்து வரும் முருக பக்தர்களுக்கு கால்களில் மருந்துகளை தடவி விட்டு சேவை செய்தனர்.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்துக்கள் இஸ்லாமியர்கள் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் மருத்துவ முகாம் அமைத்து கடந்த நான்காவது ஆண்டுகளாக செயல்படுத்தி வருகின்றனர்.
மூன்றாம் படைவீடான பழனியில் இஸ்லாமியர்கள் முருக பக்தர்களுக்கு சேவை செய்யும் நிகழ்வு பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.






