அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையிலும் சர்வதேச சுற்றுலா ஸ்தலமான கன்னியாகுமரியில் சூரியன் உதயமாகும் காட்சியை காண அதிகாலையில் குவிந்த சுற்றுலா பயணிகள். கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் – திருவள்ளுவர் சிலை இடையே உள்ள கண்ணாடி இழை கூண்டு பாலத்தை பார்வையிட படகு துறையில் காத்திருக்கும் சுற்றுலா பயணிகள்.

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தினமும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் திருவள்ளுவர் சிலை மற்றும் அங்குள்ள கண்ணாடி கூண்டு பாலத்தை பார்வையிடவும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வருகின்றனர். கோடை விடுமுறை துவங்கி உள்ள நிலையில் கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
சூரியன் உதிப்பதை பார்வையிட அதிகாலை முதல் முக்கடல் சங்கமத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சூரியன் மெல்ல கடலில் இருந்து வெளியே வரும் காட்சிகளை பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள் தங்களது செல்போனில் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலும் சன் செட் பாயிண்ட் பகுதியிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
அக்னி நட்சத்திரம் துவங்கியுள்ள நிலையிலும் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் – திருவள்ளுவர் சிலை இடையே உள்ள கண்ணாடி இழை கூண்டு பாலத்தை பார்வையிட பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர்.