• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கடல் நடுவில் கண்ணாடி பாலம்: மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

ByP.Kavitha Kumar

Dec 30, 2024

கன்னியாகுமரியில் கடல் நடுவில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழைப்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

கன்னியாகுமரியில் கடலின் நடுவே பாறையில் கம்பீரமாக காட்சி தரும் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு தற்போது 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி அரசு சார்பில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தது. அதன்படி இன்று முதல் 2 நாட்கள் விழா நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

வெள்ளி விழாவின் முதல் நாள் நிகழ்ச்சி இன்று மாலை தொடங்குகிறது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் கன்னியாகுமரி வருகிறார். பின்னர் அவர், மாலை 4.30 மணிக்கு பூம்புகார் படகு குழாமுக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை பார்வையிடுகிறார். அதன்பிறகு படகு மூலமாக சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு மலர் அஞ்சலி செலுத்துகிறார்.

பின்னர், திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் வகையில் ரூ.37 கோடியில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தையும், பூம்புகார் நிறுவனத்தின் கைவினைப் பொருட்கள் அங்காடியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார். மாலை 6.30 மணிக்கு அய்யன் திருவள்ளுவர் உருவச்சிலை படகு குழாமுக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3-டி லேசர் காட்சியையும், வீடியோ படக்காட்சியையும் கண்டுகளிக்கிறார்.

அதைத்தொடர்ந்து திருக்குறள் நெறி பரப்பும் 25 தமிழ் அறிஞர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார்.
நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சி தொடங்குகிறது. தலைமைச் செயலாளர்
முருகானந்தம் வரவேற்று பேசுகிறார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிஞர் வைரமுத்து, சிங்கப்பூர் மந்திரி சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசுகிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள்ளுவர் தோரணவாயிலுக்கு அடிக்கல் நாட்டியும், சாலைக்கு அய்யன் திருவள்ளுவர் சாலை என பெயர் சூட்டியும், திருவுருவச் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலரை வெளியிடுகிறார்.கன்னியாகுமரி சுற்றுலாத்தலம் விழாக்கோலம் பூண்டுள்ளது. முதலமைச்சர் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.