அரியலுார். திருச்சியில் மதிமுக சார்பில் ஜனவரி மாதம் நடைபெறும் சமத்துவநடைபயணத்தில் திரளானோர் பங்கேற்பது உள்ளிட்ட 8 தீர்மானங்கள் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

அரியலூரில் மாவட்ட மதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் சகாதேவன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேல், மாவட்ட பொருளாளர் வீர புகழேந்தி,தலைமை செயற்குழு உறுப்பினர் சி.இளவரசன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் உஷா செல்வம், கோ .பழனிவேல், சே கலீஸ்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மதிமுக பொருளாளர் மு.செந்திலதிபன், அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா ஆகியோர் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி கட்சிக்கு அதிக அளவில் தேர்தல் நிதி வழங்குதல் குறித்தும், வரும் ஜனவரி மாதம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெறவுள்ள திருச்சி சமத்துவ நடைபயணத்தில், அரியலூர் மாவட்டத்தில் இருந்து மதிமுக தொண்டர்கள் திரளனோர் பங்கேற்க செய்வது குறித்தும், கட்சி வளர்ச்சி குறித்தும் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், போதைப்பொருட்களிலிருந்து இளைஞர்களை காக்கவும், ஜாதி,மத மோதல்களை தடுத்திடவும் வலியுறுத்தி திருச்சியில் ஜன.2 அன்று தொடங்கி மதுரையில் ஜன.12 அன்று நிறைவடையும் சமத்துவ நடை பயணத்தில் மதிமுகபொதுச் செயலாளர் வைகோவுடன் திரளானோர் பங்கேற்பது,2026 சட்டப்பேரவை தேர்தல் நிதி, கழக வளர்ச்சி நிதி வசூல் செய்து மாவட்ட கழகத்தின் சார்பில் கட்சி தலைமைக்கு வழங்குவது,2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணியுடன் நீடிப்பது, நமது இயக்கம் அங்கீகாரம் பெறும் அளவுக்கு தொகுதிகளை கேட்டு பெறுவது, சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி மாபெரும் வெற்றி பெற பணி செய்வது. தொடர் மழையின் காரணமாக விவசாயிகளின் மக்காச்சோளப் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை அரசு கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வலியுறுத் துவது,விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் வழங்க வலியுறுத்துவது, அரியலூர் பேருந்து நிலையத்தை விரைவில் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் க.இராமநாதன், மதிமுக ஒன்றிய செயலாளர்கள் ஆ அண்ணாதுரை, பி.சங்கர்,கவிஞர் எழிலரசன், இரா .இராமசாமி,ஜே பன்னீர்செல்வம், சா .ராமச்சந்திரன்,விளாகம் பிச்சப்பிள்ளை, நெ ரமேஷ்பாபு, க.பழனிச்சாமி , பொதுக்குழு உறுப்பினர்கள் வி எஸ்.சிவக்குமார், க .தங்கராஜ், வி எஸ் மோகன் தாஸ், எம்.ராமலிங்கம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் மதிமுக நகரச் செயலாளர் இரா.மனோகரன் நன்றி கூறினார் .




