தமிழ்நாட்டில் 17க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவலாக விவசாயிகள் மக்காசோள சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடப்பாண்டு மக்காசோளம் விலை வீழ்ச்சி அடைந்து விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

மத்திய அரசு ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ரூ.2435 குறைந்தபட்ச ஆதார விலையாக அறிவித்துள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு அரசு அறிவித்த விலை கிடைப்பதில்லை. தற்போது தமிழ்நாட்டில் ஒரு குவிண்டால் மக்காசோளம் ரூ.1600 முதல் ரூ.1800 வரை தான் தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இடைத்தரகர்களை வைத்து பல நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்து ஒன்றிய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதார விலையை விட ரூ.835 குறைவாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்கின்றனர்.
தமிழ்நாட்டில் இரண்டு பருவங்களிலும் சேர்த்து 30 லட்சம் டன் மக்கா சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. மக்காசோளம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் சுமார் இரண்டாயிரம் கோடிக்கும் மேல் இழக்கின்றனர். தமிழ்நாட்டில் விளைகிற மக்காசோளத்தில் 65 சதவீதத்தை கோழி மற்றும் மாட்டுத்தீவனங்கள் தயாரிப்பதற்காக நிறுவனங்கள் இடைத்தரகர்களை வைத்து விவசாயிகளிடம் வாங்குகின்றனர். தமிழ்நாட்டின் தேவையை விட குறைவான உற்பத்தி இருக்கிற நிலையிலும் வியாபாரிகள் சின்டிகேட் அமைத்துக் கொண்டு விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு மக்காளக்சோளத்தை கொள்முதல் செய்து வருகின்றனர்.

எனவே, விவசாயிகள் உற்பத்தி செய்யும் மக்காசோளத்தை அரசே கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு அறிவிக்கும் ஆதார விலை அனைத்துப் பொருட்களுக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்திட வேண்டும். மக்காச்சோளத்திற்கு அரசு அறிவித்த ஆதார விலையில் கொள்முதல் செய்வதற்கு மாநில அரசு முத்தரப்பு கூட்டம் நடத்தி உறுதிப்படுத்திட வேண்டும் என அனைத்து விவசாயிகள் சார்பில் அரசை வலியுறுத்துகிறோம்.










