திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகின்ற 28-ந் தேதி மண்டல பூஜை நிவர்த்தியாகிறது 14 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்
தமிழ் கடவுள் முருகப்பெருமான் அருள் ஆட்சி புரியும் அறுபடை வீடுகளில் “முதல் படை வீடு “, என்ற புராணவரலாறும், “திருக்கல்யாணதிருத்தலம் ” என்ற பெருமையும் கொண்டதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த 14 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜுலை மாதம் 14-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது.

இந்த நிலையில் மறுநாள் 15-ந் தேதி முதல் கோவிலின் மகா மண்டபத்தில் சாயராட்சை வேளையில் முருகப்பெருமான், சத்தியகிரிஸ்வரர், கோவர்த்தனாம்பிகைக்கு 3 குடங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு மண்டல பூஜை நடந்து வருகிறது. இந்த நிலையில் வருகின்ற 30-ந் தேதியுடன் கும்பாபிஷே கம் நடந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) நிறைவு பெறுகிறது.
மண்டல பூஜை நிவர்த்தி இந்த நிலையில் கோவிலில் வருகின்ற28-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில்மண்டல நிவர்த்தி பூஜை நடக்கிறது. இதனையொட்டிகடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி நடைபெற்றமகாகும்பாபிஷேத்தின் போது சுவாமிகளுக்குகட்டப்பட்ட காப்பு கழற்றப்படுகிறது. இன்றுடன் (20 -ந் தேதி புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடந்து 38 நாட்கள் ஆகிறது.
மகாகும்பாபிஷகம் நடந்து 48 நாட்களுக்குள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தால் கும்பாபிஷேகம் நாளில் வராத நிலையிலும் கும்பாபிஷேகத்தை கண்ட பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆகவே கடந்த ஜூலை 15 ந்தேதியில் இருந்து இன்றுவரை கடந்த 37 நாட்களில் கோவிலுக்கு பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தது.குறிப்பாக விடுமுறை நாட்களானசனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை நாட்களில் திருவிழா கூட்டம் போல எள்ளு போட்டால் எண்ணெய் எடுக்க முடியாத அளவிற்கு பக்தர்கள் குவிந்தனர்.
கடந்த 37 நாட்களில் குறைந்தபட்சம்15 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து இருக்க கூடும் என்று கோவில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மண்டல நிவர்த்தி பூஜை ஏற்பாடுகளைகோவில் அறங்காவலர் குழு தலைவர் ப.சத்யபிரியாபாலாஜி, கோவில் துணைகமிஷனர் எம்.சூரியநாராயணன், அறங்காவலர்கள் வ.சண்முகசுந்தரம், நா.மணிச்செல்வன் மற்றும் கோவில் சிவாச்சாரிகள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.