கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்தபுரம் வளாகத்தில் அமைந்துள்ள ஏகாட்சர மகா கணபதி கோவிலில் வருஷாபிஷேக விழா நேற்று (ஜூன் 26) பக்தி பூர்வமாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம் வேத கோஷங்களுடன் துவங்கப்பட்டது. பின்னர், கலச பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விநாயகருக்கு எண்ணெய், பால், மஞ்சள், பொடி, தயிர், களபம், சந்தனம், விபூதி, இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆந்திர மாநிலம் கர்னூல் ஶ்ரீ ராக்வேந்திர சுவாமி மந்திராலய மடாதிபதி சுபதேந்திர தீர்த்த சுவாமிகள் கலந்து கொண்டார்.
அபிஷேக நிகழ்வுக்குப் பிறகு, விநாயகருக்கு வெள்ளி வஸ்திரம் அர்ப்பணிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவில் , மகா கணபதி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்தார். வெள்ளி அங்குசம் மற்றும் பல வர்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பக்தர்களை கவர்ந்த வண்ணம் விநாயகர் வீதியில் எழுந்தருளினார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமியின் அருளைப் பெற்றனர்.
