• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை நிலையூர் பெரிய கண்மாய்களில் தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்கிறது. விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம்.

ByKalamegam Viswanathan

Jan 2, 2024

தமிழகத்தில் உள்ள பெரிய கண்மாய்களில் ஒன்றாக கருதப்படும் நிலையூர் கண்மாய்யானது சுமார் 700 ஏக்கர் பரப்பளவும், சுமார் 27 அடி ஆழமும், பாலமேடு சாத்தனூர் அணையை விட 7 மடங்கு கொள்ளளவு கொண்டது. இந்த கண்மாயில் பெரியமடை, சின்னமடை, உள்மடை என 3 மடைகளும்., பெரிய கலுங்கு, சின்னக்கலுங்கு என 2 கலுங்கும் உள்ளது. ஏறக்குறைய 1700 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கொண்ட கண்மாயாக திகழ்கிறது. 25 கிராம விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது.

இவ்வளவு பெருமைகளை கொண்ட நிலையூர் கண்மாயில் நீர்ப்பிடிப்பு பட்டாக்கள் மூலம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் கண்மாய் பரப்பளவு சுருங்கி 400 ஏக்கர் பரப்பளவாக காணப்படுகிறது. அதிக கனமழை பெய்தாலும்., வைகை அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அளவு அதிகரித்தாலும் கண்மாய் கடல் போல் காட்சியளிக்கும்.

இந்த நிலையில் கடந்த மாதத்தில் பெய்த தொடர் கனமழை மற்றும் வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட தண்ணீரால் கண்மாய் முழுவதும் நிரம்பியது. தொடர்ந்து., வைகை அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியதால் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் சோழவந்தான், மேலக்கால் வழியாக விளாச்சேரி கால்வாய் மூலம் நிலையூர் கண்மாய்க்கு தண்ணீர் வந்தடைந்ததால் மீண்டும் கண்மாயின் நீர்மட்டம் உயர்ந்து இன்று மறுக்கால் பாயத் தொடங்கியது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கண்மாய் திறந்து மறுகால் பாயும் நீரானது சொக்கநாதன்பட்டி வழியாக கப்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு செல்லும் பிரதான கால்வாய்கள் ஏதும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைக்காததால் தற்போது 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளதாகவும். மேலும்., விவசாயிகளின் நலன் கருதியும், குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் வேண்டும் என்பதால் ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களது சொந்த முயற்சியில் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு இன்று கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்மாய் சார்ந்த நீர்பிடிப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அதிகாரிகள் அகற்ற வேண்டும். மேலும்., பலவீனமான கண்மாயின் கரையை பலப்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்களை சீரமைத்திருந்தால் 25 கிராம மக்கள் பலனடைவார்கள் என்றும் அரசு இதனை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.