• Sun. Mar 8th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

மதுரை எய்ம்ஸ்… பாஜக அரசு ஏமாற்ற முடியாது!

ByKalamegam Viswanathan

Mar 7, 2026

மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை சுமார் 224 ஏக்கர் பரப்பளவில் சுமார் 1977 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றது. கடந்த 2019ம் ஆண்டு ஜனவரியில் அடிக்கல் நாட்டப்பட்டு பல போராட்டங்களுக்கு பின்னர் 5 ஆண்டுகளுக்கு பிறகு 2024ம் ஆண்டு மே மாதம் கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.இந்த கட்டுமானத் திட்டம் இரண்டு கட்டங்களாக 33 மாதங்களில் நிறைவடையும் என அப்போது கூறப்பட்டது.

முதற்கட்டத்தில் கல்வி வளாகம், வெளிநோயாளர் மருத்துவ சேவைகள், மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகள் மற்றும் அத்தியாவசிய சேவை கட்டிடங்கள் போன்ற முக்கிய கட்டிடங்களுக்கான முதற்கட்டப் பணிகள் துவக்கப்பட்ட தேதியிலிருந்து 18 மாதங்களுக்குள் அதாவது ஜனவரி 2026 இல் முடிவடையும் என்றும் இரண்டாவது கட்டத்தில் மீதமுள்ள உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். முழு கட்டுமான பணிகள் பிப்ரவரி 2027 க்குள் 33 மாதங்களில் நிறைவடையும் என கூறப்பட்டு வந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஹனுமந்தராவ் கூறினார். ஆனால் அவர் கூறியபடி முதல்கட்ட பணிகள் ஜனவரியில் நிறைவடைய வில்லை.

மொத்தமுள்ள 33 பிளாக்குகளில்( கட்டிடங்களில்) தற்போது மின் நிலையம், உணவு விடுதி, தங்கும் விடுதி ஆகிய பிளாக் கட்டிடங்கள் மட்டுமே 90 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்து சுற்றுச்சுவர்களில் வண்ணம் பூசப்பட்டு இறுதி கட்டத்தில் உள்ளன். மருத்துவகல்லூரி, மருத்துவமனை, வெளி நோயாளிகள், உள் நோயாளிகள் பிரிவு உள்ளிட்டவைகளில் மருத்துவ கல்லூரி கட்டிடத்தில் சுமார் 50 முதல் 70 சதவீத பணிகளே நிறைவடைந்து தற்போது சுற்றுச்சுவர் வண்ணம் பூசப்பட்டு கண்ணாடி ஜன்னல், லிப்ட், ஏ சி ஆகியவை பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டிட கட்டுமான பணிக்காக போடப்பட்ட சாரங்களை பிரித்தெடுக்கவே ஒரு மாத காலம் தேவைப்படும். இதை தவிர மற்ற பிளாக்குகளில் சில வற்றில் 10 முதல் 30 சதவீத பணிகளே நடைபெற்றுள்ளன. சில பிளாக்குகளில் 50 முதல் 70 சதவீத பணிகள் நடைபெற்றுள்ளன. மேலும் மருத்துவ கல்லூரி மற்றும் வெளி நோயாளிகள், மருத்துவமனை ஆகிய கட்டிடடங்கள் தொடர்ச்சியாக ஒரே பிளாக்கில் வருவதால் ஒரு புறம் வேலை முடிந்தாலும் அதே பிளாக்கில் மற்றொரு புறம் பணி நடைபெற்று வருவதால் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஹெல்மெட் அணிந்து தான் உள்ளே செல்ல வேண்டி வரும். மருத்துவமனை என்பது வெறும் கட்டிடம் அல்ல அதில் மாணவர்களுக்கான வகுப்பறை, ஆய்வகம், மருத்துவ உபகரணங்கள், படுக்கைகள் உள்ளிட்ட வசதிகள் செய்த பிறகு தான் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி செயல்பட முடியும் மேலும் முக்கிய நுழைவு வாசலில் இருந்து மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி கட்டிடத்திற்கு ஒரு கிலோ மீட்டருக்கு அதிகமான தூரம் வரை செல்ல இதுவரை சாலைகள் ஏதும் அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் வருவதால் ஒன்றிய பா ஜ க அரசு அவசர கதியில் முழுமையாக பணிகள் நிறைவடையாமல் திறப்பு விழா நடத்த ஏற்பாடு செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வேளை அவசர கதியில் திறந்து வைத்தாலும் அது மாணவர்கள் படிக்க இயலாத ஒரு கட்டிடமாக தான் இருக்கும் அதே போல் மாணவர்களை தங்க வைத்தாலும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தலைகவசம் ஆகியவை அணிந்து தான் வகுப்புகளுக்கு செல்ல வேண்டி வரும். ஒருவேளை அவசர கதியில் திறந்தால் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.

மேலும் கடந்த தேர்தலில் எய்ம்ஸ் குறித்த உதயநதி ஸ்டாலினின் பிரச்சாரம் பா ஜ க வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதே நிலையில் தற்போது வரை எய்ம்ஸ் பணிகள் நிறைவடையாததால் பா ஜ க பெரும் அச்சத்தில் உள்ளதால் அவசர கதியில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முருகேசன்

இது குறித்து திருப்பரங்குன்றம் முருகேசன் கூறுகையில்..,

எப்போதும் போல்.பா ஜ க அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்கிறது. கடந்த தேர்தலில் உதயநிதி பிரச்சாரம் எய்ம்ஸ் ஐ மையப்படுத்தியே இருந்தது. இந்த ஆண்டும் அதே போல் இருக்கும் என்வே பா ஜ க அரசு மத அரசியல் மூலம் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் ஏமாற மாட்டார்கள் என் கூறினார்.

கவிஞர் ஜீவா

பாவேந்தர் இலக்கிய பேரவை நிர்வாகி கவிஞர் ஜீவா கூறுகையில்..,

இந்த எய்ம்ஸ் திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 15 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்த திட்டம் அதனாலேயே பா ஜ க அரசு இதை நீண்ட நாட்கள் கிடப்பில் போட்டிருந்தது பல கட்ட போராட்டத்திற்கு பின்னர் இது அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. தமிழகத்திற்கு எந்த நிதியும் ஒதுக்காத ப ஜ க அரசு மற்ற மாநில எய்ம்ஸ் மருத்துவமனைகளை மத்திய அரசு நிதியில் கட்டிவிட்டு தமிழகத்திற்கு மட்டும் ஜப்பானிடம் நிதி கோரியது. கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த பின்னர் படுக்கை வசதி, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்த பின்னரே திறக்கப்பட வேண்டும் என கூறினார்.