• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பிரேசிலின் புதிய அதிபராகிறார் லூயிஸ் இனாசியோ

பிரேசில் நாட்டின் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர இருக்கிறார்.
இந்த தேர்தலில் லூயிஸ் இனாசியோ வெற்றி பெற முடியாது என பெரும்பாலான ஊடகங்களின் கருத்துக்கணிப்புகளை முறியடித்து, லூயிஸ் இனாசியோ வெற்றி வாகை சூடியுள்ளார்.
லூயிஸ் இனாசியோவின் வெற்றியின் மூலம் பிரேசிலில் வலதுசாரி ஆட்சிக்கு முடிவுக் கட்டப்பட்டு, இடதுசாரி ஆட்சி மீண்டும் மலரவுள்ளது.
உலகின் 4-வது மிகப்பெரிய நாடான பிரேசிலில் கடந்த 2-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிபர் பதவிக்கு 9 பேர் போட்டியிட்டனர். இருந்தபோதிலும், தற்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோவுக்கும், முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா இடையே தான் கடுமையான போட்டி நிலவியது. இதில் தற்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ தீவிர வலதுசாரி ஆவார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ இடதுசாரி கொள்கைகளை கொண்டவர்.
இதனிடையே, தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் தற்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோவுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பெரும்பாலான ஊடகங்கள் தெரிவித்து வந்தன. ஆனால், அங்கு உண்மையான கள நிலவரம் வேறு மாதிரி இருப்பதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவித்து வந்தனர். குறிப்பாக, தற்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ கொரோனா சூழலை கையாண்ட விதமும், அமேசான் மழைக்காடுகள் அழிப்பு கொள்கையும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், எதிர்ப்பலைகளையும் உருவாக்கி இருந்தது. இதனால் ஜெயீர் போல்சனரோ வெற்றி பெறுவது கேள்விக்குறியாக இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முதல் எண்ணப்பட்டு வந்தன. இதில் தொடக்க சுற்றுகளில் அதிபர் போல்சனரோவே முன்னணியில் இருந்து வந்தார். ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் இடதுசாரி தலைவர் லூயிஸ் இனாசியோ லூலா முன்னிலை வகித்தார். இந்த சூழலில், 50.9 சதவீத வாக்குகளை பெற்று முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ வெற்றி பெற்றதாக பிரேசில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்நாட்டு நடைமுறைப்படி 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகளை யார் பெறுகிறார்களோ, அவரே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார். அதன்படி, லூயிஸ் இனாசியோ பிரேசில் நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவர் விரைவில் அதிபராக பதவியேற்பார் எனத் தெரிகிறது.
பிரேசிலில் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லூயிஸ் இனாசியோ லூலா டா (77), தீவிர கம்யூனிஸ கொள்கையை கொண்டவர். 2003 முதல் 2010-ம் ஆண்டு வரை பிரேசில் நாட்டின் அதிபராக பதவி வகித்தார். இவரது ஆட்சியில் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இதன் காரணமாக, பிரேசில் பொருளாதாரம் மிகவும் வலுவானதாக மாறியது. இருந்தபோதிலும், அடுத்து நடைபெற்ற அதிபர் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து, அதிபராக பதவியில் இருந்த போது ஒரு கட்டுமான நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவே, லூயிஸ் இனாசியோ சிறை சென்றார். சிறையில் ஒன்றரை ஆண்டுகளை கழித்த அவர், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டை பொய் என நிரூபித்து விடுதலை ஆனார். இதன் தொடர்ச்சியாக, அதிபர் தேர்தலில் போட்டியிட்ட இனாசியோ தற்போது வெற்றியும் பெற்று மீண்டும் அதிபர் நாற்காலியில் அமரவுள்ளார். இதனால், அவரது ஆதரவாளர்களும், இடதுசாரிகளும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.