இன்று நடைபெறுவதாக இருந்த நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்தப் படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இரண்டாவது பாடலும் விரைவில் வெளியாக உள்ளது. இசை வெளியீட்டு விழாவுக்கான டிக்கெட்டுகளின் புகைப்படம் இணையத்தில் வெளியானது.
இந்நிலையில், இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பு நிறுவனமான செவ்ன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த நிறுவனம் எக்ஸ் வலைதளத்தில் விடுத்துள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,
லியோ ஆடியோ ரிலீஸ் ரத்து செய்யப்படுகிறது. நிகழ்ச்சிக்காக அதிக எண்ணிக்கையில் பாஸ் கேட்டு வருகின்றனர். எனவே பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளோம்.
அடுத்தடுத்த அப்டேட்களுடன் ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வோம். இந்த முடிவு பலர் நினைப்பது போல் அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ எடுக்கப்பட்டது அல்ல என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லியோ திரைப்பட இசை வெளியீட்டு விழா ரத்து..!
