கம்பத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு, மறைந்த மணமகளின் தந்தை ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன் வந்ததால் திருமண வீட்டார் நெகிழ்ச்சி அடைந்தனர்.

திருமணம், காதணி விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் மறைந்து போன உறவுகளின் தத்ரூப சிலைகளை வைக்கும் வழக்கம் சமீபகாலமாக ட்ரெண்டாகி வருகிறது. இது மறைந்த உறவினர்கள் அந்த நிகழ்வில் இல்லாத மனக்குறையை போக்கும் விதமாக அமைந்தது. அந்த வரிசையில் இப்போது ஏ. ஐ., தொழில்நுட்பமும் இணைந்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் சுப்பையா, அமுதவள்ளி தம்பதி. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுப்பையா மறைந்து விட்டார். நேற்று இவரது இளைய மகள் ரூபிகாஸ்ரீ – கௌசிக் திருமணம் கம்பத்தில் நடந்தது.

மணமகளின் மாமாவான ஹரிஷ் சரவணன், மறைந்த மணமகளின் தந்தையை ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன் ஒரு வீடியோவாக தயார் செய்தார்.
வீடியோவில் திருமண மண்டபத்திற்குள் அவர் நடந்து வருவது போலவும், மேடையில் ஏறி மணமக்கள் இருவரையும் தனித்தனியாக ஆசீர்வதிப்பது போலவும் தத்ரூபமாக தயாரித்திருந்தனர். மேலும் மணமக்கள் மற்றும் உறவினர்கள் அனைவரின் பெயர்களையும் சொல்லி அவர்களை ஆசீர்வதிப்பது போல ஏ.ஐ., குரல் பதிவும் செய்து மணமேடையில் ஒளிபரப்பினர்.
எதிர்பாராத இந்த நிகழ்வு, திருமணத்திற்கு வந்திருந்தவர்களையும், உறவினர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

எல்லோராலும் பணம் செலவழித்து மெழுகு சிலை தயாரிக்க முடியாத சூழலில், ஏ ஐ போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் பல வகைகளிலும் உதவியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.






