காரைக்காலில் அமைந்துள்ள ஸ்ரீ கயிலாசநாத சுவாமி ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானத்தை சேர்ந்த கடைத்தெரு ஸ்ரீ பொய்யாத மூர்த்தி விநாயகர் ஆலயத்தில் 17ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளை 4 ஆண்டு முன் துவங்கினர்.

இவ்வாலயத்தில் பல்வேறு சிற்ப பணிகள் செய்யப்பட்டு ஆலய பணிகள் நிறைவேற்று கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி கடந்த 26ம் தேதி அன்று காலை விக்னேஸ்வர பூஜையும், மாலை முதல் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இன்று காலை 29ம் தேதி 6ம் கால யாகசாலை பூஜை முடிவுற்று மகா பூர்ணாஹதி நடைபெற்றது.முன்னதாக மயிலாடுதுறை மயூரநாத சுவாமி திருக்கோயின் அவையாம்பாள் என்கின்ற யானையை வைத்து அதிகாலை கஜபூஜை நடைபெற்றது.
தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்து ஆலயத்தை வலம் வந்து வேதமந்திரங்கள் முழங்க ஆலய விமானங்கள் மற்றும் மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்று. இதில் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ பொய்யாத மூர்த்தி விநாயகருக்கு, மகாபிஷேகமும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் புதுச்சேரி மாநில சபாநாயகர் செல்வம், அமைச்சர் திருமுருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பொய்யாத மூர்த்தி விநாயகரை தரிசனம் செய்தனர்.