விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சரும், ஒரிசா மாநில ஆளுநரும், காந்தி கலைமன்ற நிறுவனமான பி. எஸ். குமாரசாமி ராஜாவின் 127–ஆவது பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையத்தில் பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு பி.எஸ்.கே நகரில் அமைந்துள்ள அவரது நினைவாலயத்தில் பி.ஏ.சி ராமசாமி ராஜா இசைப் பள்ளி குழுவின் கீர்த்தனாஞ்சலி மற்றும் புஷ்பாஞ்சலி வழிபாடு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அவரது நினைவிடத்தில் ராம்கோ குழுமத் தலைவர் பி.ஆர் வெங்கட்ராமராஜா, அவரது மனைவி பி.வி நிர்மலா ராஜூ,
காந்திகலைமன்ற அறங்காவலர் என்.கே.ஸ்ரீகண்டன்ராஜா மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மாலையில் காந்தி கலைமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பி. எஸ். கே. ருக்மணி அம்மாள் கலையரங்கத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவிற்கு காந்தி கலைமன்ற அறங்காவலர் என்.கே.
ஸ்ரீகண்டன்ராஜா தலைமை வகித்தார். முன்னதாக காந்தி கலைமன்ற அறங்காவலர் பி.ஜே.ராம்குமார் ராஜா வரவேற்றார். பின்னர் “வீடும் நாடும்” என்ற தலைப்பில் மதுரை வானொலி (பணி நிறைவு) சண்முக ஞானசம்பந்தன் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். பிறந்தநாளை முன்னிட்டு ராஜபாளையம் ஜவகர் மைதானம், திருவனந்தபுரம் தெரு, காந்தி சிலை ரவுண்டானா அருகே உள்ள பி. எஸ். கே. சிலை, நகராட்சி அலுவலகம் வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு பொதுமக்கள் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள்,அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.