• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

குலசாமி – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தில் விமல் நாயகனாகவும், தான்யா ஹோப் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் கீர்த்தனா, திருநாவுக்கரசு, ஜனனி பாலு, வினோதினி, போஸ் வெங்கட், முத்துப்பாண்டி, லாவண்யா, சூர்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். மேலும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் ஓய்வு பெற்ற டிஜிபியான ஜாங்கிட் நடித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு இந்தியாவில் தற்போது வழங்கப்படும் சிறை தண்டனையெல்லாம் போதாது. அவர்களைக் கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்ய வேண்டும் என்கிறது இந்தக் ‘குலசாமி’ திரைப்படம்.

தங்கையின் படிப்புக்காக ஊரைவிட்டு மதுரைக்கு வந்து ஆட்டோ ஓட்டி வருகிறார் சூரசங்கு. இவரின் தங்கை மருத்துவக் கல்லூரி மாணவி கலை. இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்.

தங்கையின் விருப்பப்படியே அவரது உடலை அதே மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்கிறார் அண்ணன். ஆனாலும் தினமும் மதியம் 1 மணிக்கு அந்தக் கல்லூரியின் சவக்கிடங்கிற்கு வந்து தனது தங்கையைப் பார்த்துவிட்டுப் போவார் சூரசங்கு.

இந்த நேரத்தில் அதே கல்லூரியில் மீண்டும் ஒரு பாலியல் கொலை சம்பவம் நடைபெறுகிறது. இந்த முறை இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட நபர் கோர்ட்டிலேயே படுகொலை செய்யப்படுகிறார்.

இந்தக் கொலையை செய்தது சூரசங்குதான் என்று நினைத்து போலீஸ் அவரைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்துகிறது. ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் அவரை நிரபராதி என விடுதலை செய்கிறது.

இதைத் தொடர்ந்து, மேலும் சில பாலியல் கொலைகள் நடக்கின்றன. இதன் தொடர்ச்சியாய் இந்தக் கொலைகளை செய்த குற்றவாளிகளும் வரிசையாக, கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்கள்.

இந்தக் கொலைகளையெல்லாம் செய்வது யார்..? அந்தக் கொலையாளிக்கும் சூரசங்குவிற்கும் உள்ள தொடர்பு என்ன..? சூரசங்குவின் தங்கையைக் கொன்றது யார்..? போன்ற கேள்விகளுக்கு விடைதான் இந்த ‘குலசாமி’ திரைப்படம்.

பொதுவாக ‘குலசாமி’ என்பது நமது சமூகத்தில் இருக்கும் பல்வேறு சாதியினருக்கும் இருக்கும் தனிப்பட்ட குடும்பத் தெய்வங்கள். குடும்பத்தில் 2 தலைமுறையாக ஆணோ, பெண்ணோ பிறக்காமல் மூன்றாவது தலைமுறையாக அந்தக் குடும்பத்தில் பிறப்பு இருந்து, அந்தக் குடும்பத்தின் குல தெய்வமும் அதே இனம்தான் என்றால் அந்தப் பையனையோ, பெண்ணையோ ‘குலசாமி’ என்பார்கள். இது போன்ற அடைமொழியாகப் பிறந்தவர்களுக்கு வீட்டில் மரியாதை அதிகமாக இருக்கும்.

அப்படியொரு ‘குலசாமி’யாகப் பார்க்கும் நாயகன் வேடம் என்று சொல்லி விமலை இந்தப் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். இதுவரையிலும் விமலை காமெடி வேடத்திலேயே பார்த்த ரசிகர்களுக்கு இந்தப் படத்தில் வேறுவிதமாக தோன்றுகிறார். கொஞ்சம் கூடுதலாக உடம்பைக் கூட்டி, மீசையை முறுக்கி, தாடியை வளர்த்து ஆள் லேசாக மாறிய தோற்றத்தில் நடித்திருக்கிறார் விமல்.

டாஸ்மாக் கடையை குத்தகைக்கு எடுத்தது போன்று குடித்துக் கொண்டேயிருப்பது.. தங்கையின் மீது பாசத்தைக் கொட்டுவது.. மற்றைய பெண்களிடம் நல்லவனாக நடந்து கொள்வது.. பாசம் மிகுதியாகி கதறி அழுவது.. பழி வாங்கும் குணத்தை மறைத்துக் கொண்டு நல்லவனாக காட்டிக் கொள்வது.. என்று பல்வேறு வகையான நடிப்பினையும் காட்டியிருக்கிறார் விமல்.

நாயகி தன்யா ஹோப்பிற்கு பெரிய அளவுக்கு ஸ்கோப் இல்லை. ஆனால் கதையை நகர்த்துவதற்கு இவரும் பெரிதும் உதவியிருக்கிறார். விமலைக் காதலிப்பது, “குடிக்காதே” என்று அட்வைஸ் செய்து அவரைத் திருத்துவது, விமலுக்கு தைரியம் கொடுத்து ஊக்கப்படுத்துவது.. கிளைமாக்ஸில் வில்லனிடம் மாட்டிக் கொண்டு நாயகனால் காப்பாற்றப்படுவது என்று வழக்கமான நாயகிக்கான சடங்கையே இந்தப் படத்திலும் செய்திருக்கிறார் தன்யா ஹோப்.

அருப்புக்கோட்டை நிர்மலா தேவி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் வினோதினிதான் படத்தில் பேசப்பட்டிருக்கும் கலைஞர். நல்லவரா.. கெட்டவரா.. என்பதை யூகிக்கவே முடியாதவகையில் இருக்கிறது இவரது நடிப்பு. பாராட்டுக்கள்..!

விமலின் தங்கையாக நடித்திருக்கும் கீர்த்தனாவும், கல்லூரி மாணவியாக வரும் லாவண்யா மாணிக்கமும் பரிதாபமாக உயிரைவிட்டாலும் சிறப்பான கவனத்தை ஈர்க்கும்வகையில் நடித்திருக்கிறார்கள்.

போஸ் வெங்கட், கொடூர வில்லன்களில் ஒருவராக நடித்திருக்கும் இயக்குநரின் மகன் சூர்யா, வில்லனாக நடித்திருக்கும் ஜனனி பாலு, கூட இருந்தே குழி பறிக்கும் சப் இன்ஸ்பெக்டர் என்று மற்றவர்களும் இயக்குநர் சொல்லிக் கொடுத்தது போலவே நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ‘வைட் ஆங்கிள்’ ரவியின் ஒளிப்பதிவில் குறையுமில்லை. மிகையுமில்லை. புதுமுக இசையமைப்பாளரான வி.எம்.மகாலிங்கத்தின் பாடல்களின் இசையும், பின்னணியிசையும் சுமார்தான். டைட்டில் பாடல் மட்டும் கவனம் பெறுகிறது.

கனல் கண்ணனின் சண்டை பயிற்சி இந்தப் படத்தில் ஏனோ தானோவென்று இருப்பது ஏன் என்று தெரியவில்லை. கோபி கிருஷ்ணனின் படத் தொகுப்புக்கு வேலையே இல்லை. அந்த அளவுக்கு சீரியல் டைப்பில் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

நடிகர் விஜய் சேதுபதிதான் வசனம் எழுதியிருப்பதாக டைட்டிலில் போடுகிறார்கள். ஆனால் இப்படி போடாமல் இருந்திருந்தாலே, விஜய் சேதுபதிக்கு பெருமையாக இருந்திருக்கும்.

பொள்ளாச்சி பாலியல் கொடுமை, அருப்புக்கோட்டையில் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்தது என்ற இந்த இரண்டு நிஜக் கதைகளை வைத்துதான் மொத்தப் படத்தையும் எடுத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், இதில் சுவாரஸ்யமே இல்லை என்பதுதான் உண்மை.

பாலியல் வன்கொடுமை காட்சிகளைக் காட்சிப்படுத்தியவிதமும், அந்தக் குற்றவாளிகளுக்குக் கொடுக்கும் தண்டனையும் வக்கிரத்தின் உச்சமாக இருப்பதால் ரசிக்க முடியவில்லை.

சாதாரணமான வசனங்களும், நேர்மறையாக இல்லாத திரைக்கதையும், அழுத்தமில்லாத நட்சத்திரங்களின் நடிப்பும் இந்தப் படத்தை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது என்கிற முடிவுக்கே கொண்டு வரவிடவில்லை.

இது போன்ற நிஜமான கதைகளை படமாக்கும்போது, கூடுதல் தகவல்களுடன் பார்வையாளர்களைக் கவர்வது போன்ற திரைக்கதையில் சொல்ல வேண்டும். அது இந்தப் படத்தில் மிஸ்ஸிங்.

மேலும் படத்தில் சொல்லியிருக்கும் குற்றங்களுக்கான தண்டனைகளை எப்போதும் ஏற்க முடியாதது. உணர்ச்சி வேகத்தில் கை தட்டலை பெறுவதற்காக வேண்டுமானால் அப்படி சொல்லலாம். ஆனால் சட்டப்படிதான் அனைத்துக் குற்றங்களுக்கும் தண்டனை தரப்பட வேண்டும். என்ன தண்டனை என்பதை மட்டும் இன்னும் சீரியஸாக விவாதிக்கலாம். ஆனால் இந்தப் படத்தில் உள்ளதுபோல் அல்ல..!

இது போன்ற தண்டனைகள்தான் தீர்வு என்று நினைத்தால் அது எதிர்காலத்தில் நம்முடைய சக மனிதர்களிடையே வன்முறை பெருகுவதற்குக் காரணமாகிவிடும்.