• Mon. Jun 5th, 2023

ஒமிக்ரானை குணப்படுத்துமா கபசுர குடிநீர்?

இந்திய மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத் துறை சார்பில் ஐந்தாவது சித்த மருத்துவ திருநாள், நெல்லை கொக்கிரகுளம் மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் இந்திய மருத்துவத்தின் மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலர் பிச்சையா குமார் கலந்துகொண்டு சித்த மருந்து கண்காட்சி மற்றும் சித்த மூலிகை கண்காட்சியை திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள், சித்த மருத்துவ ஆர்வலர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம் நடைபெற்றது. பின்னர், இந்திய மருத்துவத்தின் மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலர் பிச்சையா குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் ஆகியவை மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற மருந்துகளில் ஒன்று. இதனை மக்கள் அனைவரும் பயன்படுத்தி நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் சித்த மருந்து நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன என்று கூறினார்.
கபசுரக் குடிநீர் உடலில் வைரஸ் எண்ணிக்கை பரவாமல் தடுக்கும் மருந்து. கொரோனாவுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒமிக்ரான் லைரஸ் தொற்றுக்கு கபசுர குடிநீர் பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

கபசுரக் குடிநீர் நல்ல மருந்தாக செயல்படும். சர்வதேச அளவில் கபசுரக் குடிநீருக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 வது அலையில் சித்த மருத்துவமனை மூலம் 69 மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 50 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொண்டு குணம் அடைந்தனர்.


இவர்களுக்கு சித்த மருந்து மட்டுமே மருந்தாக கொடுக்கப்பட்டு நோய்த்தன்மை குறைக்கப்பட்டு பூரண நலம்பெற செய்யப்பட்டது. சித்த மருத்துவ முறையில் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் 0.01% மட்டுமே சிக்கலான நிலைக்கு நோயாளிகள் சென்ற பரிந்துரை விகிதம் என்று பிச்சையா குமார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *