அரசு ரப்பர் கழகத்தை தனியாருக்கு தாரை வார்த்ததை கண்டித்து கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (04-12-2025) கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரர் தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரே அரசு நிறுவனம் அரசு ரப்பர் கழகம் ஆகும். அரசு ரப்பர் தோட்டம் 1956-ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜரால் ஆரம்பிக்கப்பட்டு 4785 ஹெக்டேரில் 4 ஆயிரம் குடும்பங்கள் பணி செய்து வந்தார்கள். 1984-ல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் தொழிலாளர்களின் போராட்டத்தால், அரசு ரப்பர் கழகமாக மாற்றப்பட்டது. அரசு ரப்பர் கழகமாக மாற்றப்பட்ட நிலையில் 3 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது தி.மு.க ஆட்சியில் அரசு ரப்பர் கழக அதிகாரிகளாhல் 3082 ஹெக்டேராக மாறி, தற்போது 1,000 தொழிலாளர்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள்.
தி.மு.க அரசு ரப்பர் கழக நிர்வாகம் சூழியல் பூங்கா அமைக்க வனத்துறை வேறு இடங்களை தேர்வு செய்து வேளிமலை கிராமத்தில் 168.20 ஹெக்டேர் நிலத்தினை ரப்பர் ஆராய்ச்சி மையம் அமைக்க அளவீடு முடிவுற்ற நிலையில், வேளிமலை கிராமத்தில் அளவீடு செய்த இடம் சரியில்லை என்று கூறியதும், கீரிப்பாறை பிரிவில் 72 நிரந்தர தொழிலாளர்கள் பணி புரிந்து வரும் பிரிவில் கூப்பு எண்: 2-ல் னு3 முறையில் நல்ல பால் வடிப்பு நடந்து அதிக வருமானம் தரும் கூப்பில் 18 ஹெக்டேர் நிலைத்தினை சூழியல் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, நில அளவை முடிந்து நிலத்தினை வனத்துறை கையகப்படுத்தும் நிலையில் உள்ளது. இதனால் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழப்பதுடன் அரசிற்கு தினம் சுமார் ரூ. 4 இலட்சம் நஷ்டமும் ஏற்படும்.
தமிழக வனத்துறையால் சூழியல் பூங்கா அமைக்க அரசாணை எண்: 131, நாள்: 07-08-2024 வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வனத்துறையால் சூழியல் பூங்கா அமைப்பதற்காக 04-12-2025 அன்று வரை ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. ஆனால் இதுவரை ஒப்பந்தம் எடுப்பதற்கு யாரும் தயாராக இல்லை.

மேலும் தமிழக வனத்துறை சூழியல் பூங்கா அமைக்க வனத்துறையால் தேர்வு செய்யப்பட்ட இடம், தொழிலாளர்களுக்கும், அரசு ரப்பர் கழகத்திற்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். தற்சமயம் 18 ஹெக்டேர் நிலம் அரசு ரப்பர் கழகத்திலிருந்து வனத்துறைக்கு மாற்றம் செய்யவில்லை. இதனால் ஒப்பந்த புள்ளி எடுப்பதற்கு யாரும் தயார் நிலையில் இல்லை. மேலும் இந்த 18 ஹெக்டேர் நிலத்தில் உள்ள 5 ஆயிரம் மரங்களிலிருந்து பால் வெட்டுவதற்கு தனி நபருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து அரசு ரப்பர் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், தங்களுக்கே பால் வெட்டும் பணியினை தர வேண்டும் என்று கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய தொழிலாளர்கள் 82 பேர் மீது அவர்கள் வேலையிலிருந்து விடுவிக்கும் வகையில் பணி நீக்கம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே, தற்சமயம் தொழிலாளர்களின் நலன் கருதி அந்த 18 ஹெக்டேர் நிலங்களில் உள்ள பால் வெட்டும் மரங்களில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு பால் வெட்டுவதற்குரிய பணியினை ஒதுக்க வேண்டும் என்றும், தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணி நீக்கம் உத்தரவை ரத்து செய்ய வேண்டியும், பால் வெட்டும் பணியினை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்றும், ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றி, இதன் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் அ.இ.அ.தி.மு.க அண்ணா ரப்பர் தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.








