அரியலூர். இதுக்குறித்து,உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் மு. ஞானமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அவர் தெரிவித்துள்ளதாவது,நேர்மையாகச் செயல்பட்டதால் நீதிபதி ப.உ.செம்மல் பழிவாங்கப்பட்டிருக்கிறார்.
நீதிபதி ப.உ.செம்மல் போக்சோ மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களில் சிறப்பு நீதிபதியாகச் செயல்பட்டவர். மேலும், பணியாற்றிய அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் பாதிக்கப்பட்டோருக்கான நீதியினை சட்டத்தின் அடிப்படையில் வழங்கியவர். பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக நீதியின் பக்கம் நின்று, சட்டத்தின்படி நீதியினைப் பெற்றுக்கொடுப்பதற்கான பல தீர்ப்புகளை வழங்கியவர். காவல்துறை மட்டுமல்லாமல் தவறு செய்த அனைத்துத் துறை அதிகாரிகளையும் கண்டிக்கத் தயங்காதவர். அதிகாரிகளைச் சட்டத்தின்படி செயல்பட வைத்தவர். இதனால், நீதிபதி செம்மல் பழிவாங்கும் நோக்கில் திட்டமிட்டு தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.


காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே உள்ள பூசிவாக்கம் கிராமத்தில் சிவக்குமார் என்பவர் நடத்தும், டீ மற்றும் பேக்கரி கடைக்கு, அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன், அவரது மனைவி பார்வதி ஆகியோர் சென்றுள்ளனர். அங்கு விற்கப்பட்ட உணவுப் பொருட்கள் தரம் இல்லாமல் இருந்தது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சிவகுமாரும் அவரது மருமகனும், காவலருமான லோகேஸ்வரன் ரவி (32) இருவரும் சேர்ந்து முருகனைத் தாக்கி, மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து முருகனின் மனைவி பார்வதி சென்ற 25.07.2025 அன்று, தனது கணவரைத் தாக்கிய மேற்படி சிவகுமார், காவலர் லோகேஸ்வரன் உள்ளிட்ட நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட முருகன், அவரது மனைவி பார்வதி ஆகியோர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள் .புகார் கொடுத்த 27 நாட்களுக்குப் பிறகு 20.08.2025 அன்று எஸ்.சி/எஸ்.டி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
08.09.2025 அன்று மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் (வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம்) இவ்வழக்கு தொடர்பான விசாரணையின்போது காஞ்சிபுரம் டி.எஸ்.பி., சங்கர்கணேஷ் ஆஜராகியுள்ளார். அவர் இந்த வழக்கில், எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி சரியாக நடவடிக்கை எடுக்காததைச் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ப.உ.செம்மல் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரில் தாமதமாக வழக்குப் பதிவு செய்தது, குற்றஞ்சாட்டப்பவர்களைக் கைது செய்யாதது, பாதிக்கப்பட்டோருக்கு நகல் வழங்காதது உள்ளிட்டவைகள் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 18-A(B) மற்றும் 10(2) ஆகியவை சட்ட மீறலாகும். இப்பிரிவுகளை டி.எஸ்.பி சங்கர்கணேஷ் முறையாகச் செயல்படுத்தத் தவறியுள்ளார்.
இச்சட்டப் பிரிவு 4-இல் உள்ளபடி டி.எஸ்.பி செய்ய வேண்டிய சட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்டுச் செய்யாமல், கடமையிலிருந்து தவறியுள்ளார். இது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 4(2)(G) கீழ் தண்டனைக்கு உரியது.
இதனடிப்படையில் டி.எஸ்.பியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி ப.உ.செம்மல் அவர்கள் உத்தரவிட்டார்.
உயர்நீதிமன்றத்தில் டி.எஸ்.பி சங்கர் கணேஷ் வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் அவர்கள், நீதிபதி ப.உ.செம்மல் பிறப்பித்த கைது உத்திரவை ரத்துசெய்து, டி.எஸ்.பியை விடுவித்து உத்திரவிட்டார். மேலும், நீதிபதி ப.உ.செம்மல் மீது உயர்நீதிமன்ற விஜிலன்ஸ் பிரிவு விசாரித்து அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்திரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற விஜிலன்ஸ் பிரிவு விசாரித்து அறிக்கைத் தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் மீண்டும் ஒரு உத்திரவுப் பிறப்பித்தார். அதில் நீதிபதி ப.உ.செம்மல் இடமாற்றம் செய்யப்பட வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலிருந்து அரியலூர் நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவராக நியமித்து இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது நீதிபதி ப.உ.செம்மல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உயர்நீதிமன்ற நீதியரசர் இரண்டு உத்திரவுகளைப் பிறப்பித்தபோது நீதிபதி ப.உ.செம்மல் இடம் விளக்கம் கேட்கவில்லை. உச்சநீதிமன்றம் K, A Judicial Officer In re (2001) என்ற தீர்ப்பில் மாவட்ட நீதிபதிகள் குறித்த வழக்குகளில் அந்நீதிபதிகளிடம் கருத்துக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக் கூடாது, அவர்கள் பெயர்களைக்கூட வெளியிடக் கூடாது என்பது கடைப்பிடிக்கவில்லை.
மேலும், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 15A(3), 15A(5) படியும், உச்சநீதிமன்றம் Hariram Bhambhi vs Satyanarayan and Anr என்ற தீர்ப்பின் படியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அளித்து விளக்கம் கேட்கப்படவில்லை.
மேலும், விஜிலன்ஸ் பிரிவு விசாரணையின் போதும் நீதிபதி ப.உ.செம்மல் இடம் விளக்கம் கேட்கப்படவில்லை. இது இயற்கை நீதிக்கு (Natural Justice) எதிரானது. அதோடு மட்டுமல்லாமல் நீதிபதி ப.உ.செம்மல் அவர்களிடம் விளக்கம் கேட்டு உயர்நீதிமன்ற பதிவாளர் அனுப்பிய கடிதத்திற்கு விளக்கம் அளிக்க போதிய அவகாசம் கேட்டும் வழங்கப்படவில்லை. மேலும், விஜிலன்ஸ் அறிக்கை மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் கேட்டும் வழங்கப்படவில்லை.
எனவே, நேர்மையான, திறமையான நீதிபதியான ப.உ.செம்மல் அவர்கள் மீதான நடவடிக்கையைக் கைவிட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தின் பணியிடை நீக்க உத்திரவை திரும்பப் பெறவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




