ஜீவ சாந்தி அறக்கட்டளையினர் சார்பாக தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் உறுப்பினர் முகமது ரஃபிக்கு கோவையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினரின் நலனை பாதுகாப்பதிலும், சிறுபான்மையினரின் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் முன்னோடியாக உள்ள தமிழ்நாடு சிறுபான்மை மாநில ஆணையத்தின் உறுப்பினராக கோவையை சேர்ந்த ஜெ.முகம்மது ரபீக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சமுதாய நல பணிகளில் ஈடுபட்டு வரும் இவர்,நாட்டின் பன்முக தன்மையை போற்றும் விதமாக பல்சமய நல்லுறவு இயக்கம் எனும் சமூக நல அமைப்பு சார்பாக மத நல்லிணக்கம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள முகமது ரஃபி க்கு கோவையில் செயல்பட்டு வரும் ஜீவசாந்தி அறக்கட்டளை சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.
ஜீவசாந்தி அறக்கட்டளையினர் ஒருங்கிணைத்த இந்த விழாவில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்,தன்னார்வ அமைப்பினர்,சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டு முகமது ரஃபி க்கு பொன்னாடைகள் போற்றி தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்தனர். விழாவில் தலைமையுரை ஆற்றிய சிறுபான்மை ஆணையத்தின் உறுப்பினர் முகம்மது ரபி, 2005 ஆம் ஆண்டு முதல் சமூக நல பணியில் தம்மை முழுமையாக அர்ப்பணித்து இருப்பதாக கூறிய அவர்,பிறருக்கு உதவி செய்தால் மட்டுமே மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலைத்திருக்கும் என கூறினார். இளம் தலைமுறையினர் ஒழுக்கமான கல்வி மற்றும் உயர்ந்த பண்புகளை கற்று கொள்ள வேண்டும் என குறிப்பட்ட அவர்,சமுதாய பணிகளில் அதிகம் அக்கறை செலுத்த வேண்டும் என கேட்டு கொண்டார்.
தற்போதைய திராவிட மாடல் அரசாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, அனைத்து சமூக மக்களுக்குமான அரசாக செயல்பட்டு வருவதாக சுட்டி காட்டிய அவர், சிறுபான்மை ஆணைய உறுப்பினராக தாம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், சிறுபான்மை மக்கள் அதிகம் வாழும் பகுதியான கரும்பு கடை பகுதியில் விரைவில் அரசு வங்கி துவங்க முயற்சி எடுப்பதோடு, இந்த பகுதியில் மகப்பேறு மருத்துவமனை துவங்கவும், அரசு ஆரம்ப பள்ளிகளை உயர் நிலை பள்ளிகளாக உயர்த்தவும் அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று விரைவில் அதற்கான பணிகள் நடக்க முயற்சி எடுப்பேன் என உறுதியளித்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் அண்மையில் வயநாடு நிலச்சரிவு பேரிடர் மீட்பு பணிகளில் ஈடுபட்ட ஜீவ சாந்தி அறக்கட்டளை குழுவினருக்கு பாராட்டு சான்றிதழ்களை அவர் வழங்கி கவுரவித்தார்.