

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆதியோகி ரதயாத்திரை மஹாசிவாரத்திரிக்கு கோவைக்கு நேரில் வந்து தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளதாக தென்கயிலாய பக்தி பேரவையினர் கோவையில் தெரிவித்தனர்.
கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில் 30-வது ஆண்டு மஹாசிவராத்திரி விழா வரும் மார்ச் 8-ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, இந்த விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், 4 ஆதியோகி ரதங்களுடன் கூடிய யாத்திரை, கடந்த ஜனவரி 5-ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு ரதமும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பயணம் செய்தன. மொத்தம் 35,000 கி.மீ பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரத யாத்திரை வரும் 26 ந்தேதி பொள்ளாச்சியில் இருந்து துவங்கி கோவையை வலம் வர உள்ளது. இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்றது. இதில் தென்கயிலாய பேரவை பக்தர்கள் வள்ளுவன், உண்ணி கிருஷ்ணன், தினகரன் ஆகியோர் பேசினர். மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென்கயிலாய பக்தி பேரவை சார்பில் பிப்.26-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை ஆதியோகி ரத யாத்திரை கோவையில் நடைபெற உள்ளது. இந்த யாத்திரையின் மூலம் பக்தர்கள் தங்கள் வீட்டின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அவரின் அருளை பெறலாம் என தெரிவித்தனர். மேலும் தமிழகம் முழுவதும் சுமார் 35,000 கி.மீ யாத்திரையாக பயணம் செய்துள்ள இந்த ஆதியோகி யாத்திரையால், ஈஷாவிற்கு நேரில் வந்து தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு சிறந்த வாய்ப்பாக அமைந்ததாக தெரிவித்தனர். இந்தாண்டு, கோவையை தவிர்த்து தமிழ்நாட்டின் 36 இடங்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை ஒளிப்பரப்பு மூலம் கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

