• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கோவையில் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்..,

BySeenu

Aug 11, 2025

ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கிராமப்புற பகுதிகளில், வரும் ஆக.16ம் தேதி தொடங்குகிறது. மூன்று கட்டமாக நடைபெறும் போட்டிகளில் மொத்த பரிசுத்தொகையாக ₹67 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதில் கிராமப்புற அணிகள் இலவசமாக பங்கேற்கலாம், ஆனால் முன்பதிவு செய்வது கட்டாயமாகும். (முன்பதிவுக்கு;- isha.co/gramotsavam, மேலும் தகவல்களுக்கு;- 83000 30999)

சத்குருவால் தொடங்கப்பட்ட ‘ஈஷா கிராமோத்சவம்’, பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டு திருவிழாவாக உருவெடுத்துள்ளது. இவ்விளையாட்டு திருவிழாவின் 17-ஆவது பதிப்பாக “ஈஷா கிராமோத்சவம்-2025” ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் 30,000 கிராமங்களில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்க உள்ளனர்.

நம் கிராமிய வாழ்வியலில் இருந்த பல்வேறு கலாச்சார அம்சங்களை நாம் இழந்து விட்டோம். இதனால் கிராம மக்களின் வாழ்வில் உற்சாகம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. கூடுதலாக கிராமங்களில் நிலவும் பொருளாதார பிரச்சனைகள் மற்றும் வேலை வாய்ப்பு இல்லாத சூழல்களால் இளைஞர்கள் போதை பழக்கங்களுக்கு அடிமையாகும் நிலையும் இருக்கின்றது.

இந்நிலையில் கிராம மக்களின் வாழ்வில் உற்சாகத்தை மீட்டெடுத்து, கொண்டாட்ட உணர்வை கொண்டு வருவதற்கான ஒரு முன்னெடுப்பாக ஈஷா கிராமோத்சவ திருவிழா சத்குருவால் 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது இளைஞர்கள் போதை பழக்கங்களிலிருந்து விடுபடவும், சாதிய தடைகளை உடைத்து, பெண்களுக்கு வல்லமை அளிக்கவும் உதவுகிறது.

மேலும் இது தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கானதாக இல்லாமல் விவசாயிகள், தூய்மை பணியாளர்கள், மீனவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் ஆகிய எளிய கிராம மக்களுக்காக நடத்தப்படுகிறது.

இது குறித்து சத்குரு கூறுகையில், “ஈஷா கிராமோத்சவம், விளையாட்டின் மூலம் வாழ்க்கையை கொண்டாடும் ஒரு திருவிழா. விளையாட்டு, சமூகப் பிரிவுகளைத் தாண்டி மக்களை ஒன்றிணைக்கும்; இதுதான் விளையாட்டின் சக்தி. ஜாதி, மதம் மற்றும் பிற அடையாளங்களின் எல்லைகளை உற்சாகமான விளையாட்டு மூலம் அழிக்க முடியும். இது ஒரு சிறந்த விளையாட்டு வீரராக மாறுவது பற்றியது அல்ல, மாறாக வாழ்நாள் முழுவதும் விளையாட்டு தன்மையுடன் இருப்பது பற்றியது. ஒரு பந்தை முழு ஈடுபாட்டுடனும் உற்சாகத்துடனும் வீச முடிந்தால், பந்து உலகத்தையே மாற்றும். உற்சாகமாக விளையாடுவதன் மகிழ்ச்சியை நீங்கள் அறிய வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

ஈஷா கிராமோத்சவம்-2025;- 6 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசம்

ஒவ்வொரு ஆண்டும் இந்த கிராமப்புற விளையாட்டு திருவிழா மிக விரிவாகவும், பிரம்மாண்டமாகவும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தாண்டு கிராமோத்சவ விளையாட்டு போட்டிகள் இம்மாதம் 16-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் ஆண்களுக்கான கைப்பந்து (வாலிபால்) மற்றும் பெண்களுக்கான எறிபந்து (த்ரோபால்) போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மற்றும் முதல் முறையாக ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 30,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 6,000-க்கும் மேற்பட்ட அணிகள் மூலம் 50,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விளையாட இருக்கின்றனர். அதில் குறிப்பாக 5,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்களும் களமிறங்கவுள்ளனர்.

இந்த போட்டிகள் 3 நிலைகளில் நடைபெறும். முதல் நிலை கிளஸ்டர் அளவிலான போட்டிகள் இம்மாதம் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறும். இரண்டாம் நிலையில் மண்டல அளவிலான போட்டிகள் அடுத்த மாதம் செப்டம்பர் 7ம் தேதி நடைபெறும். இதனையடுத்து ஆறு மாநில அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டிகள் செப்டம்பர் 21ம் தேதி, கோவை ஈஷாவில் உள்ள புகழ்பெற்ற ஆதியோகி வளாகத்தில் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டிகளில் மாற்று திறனாளிகளுக்கான பாரா கைப்பந்து (வாலிபால்) போட்டியும் நடைபெறும்.

இப்போட்டிகளில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த மக்களால் மட்டுமே அணிகள் உருவாக்கப்பட முடியும். தொழில்முறை வீரர்கள் அணிகளில் இடம்பெற முடியாது. இதில் கிராமப்புற அணிகள் இலவசமாக பங்கேற்கலாம், ஆனால் முன்பதிவு செய்வது கட்டாயமாகும். (முன்பதிவுக்கு;- isha.co/gramotsavam , மேலும் தகவல்களுக்கு;- 83000 30999)

பரிசுத்தொகை

ஈஷா கிராமோத்சவ விளையாட்டு போட்டிகளின் 3 நிலைகளிலும் பரிசுத் தொகைகள் வழங்கப்பட உள்ளன. அந்த வகையில் முதல் நிலை போட்டிகளில் முதல் நான்கு இடங்களை வெல்லும் அணிகளுக்கு முறையே ₹10,000, ₹7,000, ₹5,000 மற்றும் ₹3,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளன. அதே போன்று மண்டல அளவில் நடைபெறும் போட்டிகளில் முதல் நான்கு இடங்களில் வெற்றி பெறும் அணிகளுக்கு முறையே ₹12,000, ₹8,000, ₹6,000 மற்றும் ₹4,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளன.

இறுதிப்போட்டியில் முதல் நான்கு இடங்களில் வெற்றி பெறும் அணிகளுக்கு முறையே ₹5,00,000, ₹3,00,000, ₹1,00,000, ₹50,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளன. போட்டிகளின் மூன்று நிலைகளிலும் சேர்த்து மொத்த பரிசுத் தொகையாக ₹67 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.

கிராமிய கலை நிகழ்ச்சிகள்

இந்த திருவிழாவில் விளையாட்டு போட்டிகளுடன், நம் தமிழ்நாட்டின் தவில் – நாதஸ்வரம், வள்ளி கும்மி, ஒயிலாட்டம், கேரளாவின் பஞ்சரி மேளம், செண்ட மேளம், தெலுங்கானா பழங்குடி மக்களின் குசாடி நடனம், கர்நாடகாவின் புலி வேஷம் போன்ற பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகளும், பொது மக்களுக்கான கோலப் போட்டிகளும் நடைபெற உள்ளன. இதனுடன் சிலம்பம் போட்டிகளும் நடைபெற உள்ளன.

ஈஷா கிராமோத்சவத்தை ஒருங்கிணைத்து நடத்தும் ஈஷா அவுட்ரீச், இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் ‘தேசிய விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாக (NSPO)’அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 2018ல் இந்திய அரசின் ‘ராஷ்ட்ரிய கேல் புரோத்சாஹன் புரஸ்கார்’ விருதும் வழங்கப்பட்டது. சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், வெங்கடேஷ் பிரசாத், ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களான ராஜவர்தன் சிங் ரத்தோர் மற்றும் கர்ணம் மல்லேஸ்வரி போன்ற விளையாட்டு பிரபலங்கள் இதற்கு முந்தைய இறுதிப் போட்டிகளில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர்.