மதுரை திருப்பரங்குன்றம் அடுத்துள்ள சூரக்குளம் கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 10 லட்சம் மதிப்பீட்டில் நாடக மேடை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
வாக்கு திருட்டு விவகாரம் குறித்த கேள்விக்கு:

எங்களைப் பொறுத்தளவில் மிக முக்கியமான பிரச்சனை என்பது இந்த வாக்குத் திருட்டு. இந்த அரசும், தேர்தல் ஆணையமும் கைகோர்த்து இதை செய்ய விரும்புகிறார்கள். உச்சநீதிமன்றம் இதில் தலையிட மறுப்பது வருத்தத்திற்குரிய விஷயம். ஏழை மக்களின் வாக்குகளை எடுக்கின்ற புதிய திட்டத்தை பாஜக அறிமுகப்படுத்தி குறிப்பிட்ட தொகுதிகளில் அதை செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதன் விளைவாகத்தான் பெங்களூரு மத்திய தொகுதியில் 28000 வாக்குகளுக்கு மிகப்பெரிய தவறு நடைபெற்றுள்ளது என்று எதிர் கட்சித் தலைவர் ராகுல் காந்தி எடுத்துரைத்தார். மேலும் இதுகுறித்து சட்ட வல்லுனர்கள் ஆலோசித்து. இதற்கான அடுத்த முடிவு எடுக்கப்படும்.
கரூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு திமுக அரசுக்கு சவுக்கடி என எல்.முருகன் கூறியது குறித்த கேள்விக்கு:

எந்த ஒரு நீதிமன்ற தீர்ப்பும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு மாநில அரசுக்கு சவுக்கடி என்றால் உயர் நீதிமன்ற தீர்ப்பு மத்திய அரசுக்கு சவுக்கடியா? உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.
ஒன்று எஸ்ஐடி குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்த வேண்டும் என தவெக கேட்டிருந்தது. பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது.
இது தவெகவின் கோரிக்கை இல்லை இருந்தாலும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம். ஆனால் சிபிஐ உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து விசாரணை விரைவில் முடிந்து விடுமா என்று நாம் கண்கூட பார்க்க முடிகிறது

திருப்புவனம் அஜித் குமார் விவகாரத்தில் சிபிஐ என்ன செய்திருக்கிறார்கள். இன்று வரை என்ன நிலைமையில் உள்ளது. சிபிஐ பொறுத்த அளவில் அவர்களுக்கு பிரச்சனையே அவர்களுக்கு வேலை பார்க்க ஆட்கள் இல்லை. பிரதிநிதித்துவ அடிப்படையில் தான் ஆட்கள் போடுகிறார்கள் மதுரையில் இருந்த அஸ்ரா காருக்கு அப்படித்தான் பிரதிநிதித்துவ அடிப்படையில் சிபிஐக்கு சென்றார் அதுபோல அதிகாரிகள் இல்லாமல் சிபிஐ தத்தளிக்கிறது. அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளது. சரியான தீர்வு காண முடியாத அமைப்பாக மாறிக்கொண்டிருக்கிறது. சிபிஐ அமித்சாவின் கைகளில் இருக்கிறது. சிபிஐ விசாரணையில் உடனடியாக நியாயம் கிடைத்து விடும் என்பதெல்லாம் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. இப்போது அது வெறும் கண்துடைப்புதான். சிபிஐ எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அமித்ஷா நினைக்கிறாரோ அப்படிதான் பயன்படுத்துகிறார்.
பீகார் தேர்தல் குறித்த கேள்விக்கு:
பாஜகவை பொறுத்த அளவில் எங்கெல்லாம் கூட்டணி வைக்கிறதோ அங்கு உள்ள தோழமைக் கட்சிகளை அடித்து சாப்பிட்டு வளர்வதுதான் அவர்கள் டிஎன்ஏவில் இருப்பது. ஜனதா தளம், லோக்சக்தி ஜனதா, சிவசேனா கட்சி, ஐக்கிய ஜனதா தளமாக இருந்தாலும் எல்லா மாநிலங்களிலும் இதுதான் நடக்கிறது. அடுத்து அவர்களின் கட்டம் அதிமுக. அதிமுகவை முழுவதுமாக அடித்து சாப்பிட வேண்டும் என்பதற்காக தான் அண்ணா திமுகவை அமித்ஷா திமுகவாக மாற்றி இருக்கிறார்கள். ஜேடியுவுக்கு என்ன நடக்கிறதோ அதுதான் அமித்ஷா திமுகவிற்கு நடக்கும். சரி பங்காக சீட்டு கேட்பார்கள். அது நடந்தே தீரும். அதிமுகவை முழுமையாக விழுங்குவதற்காக அமித்ஷா திட்டமிட்டு இருக்கிறார் என்பது உறுதி. அதற்கான முன்னோட்டம் தான் ஐக்கிய ஜனதா தளத்தில் நடக்கிறது.
டேங்கர் லாரி விவகாரம் குறித்த கேள்விக்கு:

உடனடியாக கூட்டி பேச வேண்டிய முக்கியமான பிரச்சனை. முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். காலம் தாழ்த்தாமல் தீபாவளிக்கு முன்பாக தீர்வு காண வேண்டியது முக்கியம். இந்த நேரத்தில் இப்படி ஒரு சிக்கல் வரக்கூடாது, அரசு அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.